தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்குகிற தியாகராய நகர் (அ)
தி.நகர், சென்னையின் மிக
முக்கியமான வணிகப் பகுதி. துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள், மாநகர
பேருந்து நிலையம், மாம்பலம் ரயில் நிலையம், மற்றும் சில்லறை வணிக சிறு கடைகள் என மிகவும் சுறுசுறுப்பாக
இயங்கிக்கொண்டிருக்கிற பகுதி.
அன்று திங்கள் கிழமை. இரவு 10 மணிக்கே,
நாங்கள் மூவரும் அங்கு
சென்றுவிட்டோம். இரவு முழுவதும் அங்கு
இருக்கவேண்டியிருந்ததினால், சாலையில் டூ வீலருக்கு
உத்தரவாதம் இல்லையென்றெண்ணி, மாம்பலம் ரயில்வே பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு வரும் வழியில் உள்ளூர் பெருமாள் சாமி, நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார்.
அதே நேரம், பல பெருமாள் சாமிகள் இந்த உலகையே
மறந்த நிலையில், டி நகரின் வீதியினூடே அழுக்கு சட்டை சகிதமாக,
எந்தவித பிரக்ஞையிமின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்ததை
காணமுடிந்தது.
பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் எதிரே அமைந்த டீக்கடைக்கு சென்று டீ
அடித்துவிட்டு பேருந்து நிலையம் நுழைகையில், பேருந்துகள் அனைத்தும் நாள் முழுக்க
சென்னையை சுற்றிய களைப்பில் பெருமூச்சு விட்டு, பின்பு
அடங்கின. மெல்ல மெல்ல ஆட்டோ எனப்படும் மஞ்சள் நிற வஸ்துக்கள்
இப்போது பேருந்து நிலையத்தின் வாயிலை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. கடைசி பஸ்சை தவற விட்ட மக்கள், பெரும்பாலும் ஆண்கள்,
ஷேர் ஆட்டோவுக்காகவோ, இரவு நேர
பேருந்துக்காகவோ கால் கடுக்க காத்திருந்தனர். இவர்களுக்கிடையில்
ஒரே ஒரு, 40 வயது மதிப்பிடத்தக்க,
பெண்மணி மட்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தாள். ஷேர் ஆட்டோக்காரர்கள், வடபழனியையும், கோயம்பேடையும் கூறுபோட்டு விட்டுக்கொண்டிருந்தனர். ஓரிரு
டீக்கடைகள் மற்றும் இரவு நேரச்சிற்றுண்டி கடைகளை தவிர்த்து மற்ற எல்லா கடைகளும்
மூடப்பட்டுவிட்டிருந்தன.
Employees of the Textile Giants
சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் என தி.நகரின்
மிகப்பெரும் துணிக்கடலில் (நின்றுகொண்டு) வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் தத்தம் தோழன், தோழிகளோடு, அவர்களது கால்வலி பொருட்படுத்தாது,
புன்னகையோடு அரட்டையடித்தபடி அவர்களது அறைக்கு
திரும்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் நடிகர், நடிகைகள், பார்த்த/பார்க்கபோகும்
சினிமாக்களை பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. ரங்கநாதன்
தெருவில், பகலில் மனிதர்கள் அலட்சியமாக விட்டுச்சென்ற,
தூக்கியெறிந்த குப்பைகளை, அந்த குப்பைகளுக்கு
கொஞ்சமும் பொறுப்பாகாத துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12:00
சிவப்புத் துணி போர்த்திய பானையில் குல்ஃபி ஐஸ்
விற்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூன்று சக்கர வாகனத்தில் அங்குமிங்கும்
திரிந்துகொண்டிருந்தனர். மஞ்சள் நிற சிக்னல் விளக்குகள் தனக்கு
பிடித்தமான காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் நொடிக்கொருமுறை
கண்ணடித்துக்கொண்டிருந்தன. இந்த காதலை கொஞ்சமும்
பொருட்படுத்தாமல், கால் டாக்ஸிகள் மற்றும் டூ வீலர்கள்
சிக்னலை வேகமாக பாய்ந்து கடந்து, மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தன.
கொசு தன் காதில் வந்து பாடிய இன்னிசை ராகத்தைக் கூட கேட்க
விரும்பாமல், உலகிலேயே மிகவும் அழுக்கான போர்வை என்று அனைவரது பாராட்டையும்
பெற்ற போர்வையை போர்த்திக்கொண்டு பேருந்து நிழற்குடையில் உறங்கிக்கொண்டிருந்தார்
ஒரு மனிதர். அந்த 40
வயதுமிக்க பெண்மணி இன்னும் அதே இடத்தில், செல்ஃபோனை
நோண்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது
ஆட்டோக்காரகளிடம் சென்று முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பின்
சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்தின் எதிரே சென்று
நின்றுகொண்டாள். இதையெல்லாம், நின்றுகொண்டிருந்த
ஒரு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு கவனித்துக்கொண்டிருந்தேன்.
அதில் ஓர் ஆட்டோக்காரரை அணுகி, ”யாருங்க
அந்த பொம்பள, ரெண்டு மணி நேரமா இங்கயே நின்னுட்டு இருக்காங்க,
நைட் ரோந்து போலீஸா, இல்ல ஐட்டக்கார பொம்பளையா”
என்று நான் கேட்க, “தெரியலைப்பா, போலீஸா இருந்தாலும் இருக்கலாம், இப்பல்லாம் நைட்
போலீஸ் கெடுபுடி அதிகம் இருக்கு” என்றார் அவர். அதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் ரோந்து வாகனங்கள்
கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளை சுழலவிட்டுக்கொண்டு சுற்றி வந்துகொண்டிருந்தன.
ரொம்ப நேரமாக அங்கேயே உலவிக் கொண்டிருந்த எங்கள் மீதே சிலருக்கு
சந்தேகம் ஏற்பட்டிருந்தது. வெள்ளை சட்டை அணிந்திருந்த 50
வயது மதிக்கத்தக்க ஒரு மீசைக்காரர் எங்களையே நோட்டம்
விட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு,
பஸ்சை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல் இருந்துவிட்டோம். ஒரு வயதானவரிடம் அந்தப் பெண்மணி எதோ பேசிக்கொண்டிருக்கையில், தாம்பரம் போகிற இரவுப் பேருந்து ஒன்று சடேலென வந்து நிற்க, வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.
ஒரு மணிவரை இப்படி மனித நடமாட்டம் இருந்துகொண்டிருந்ததாலும், வழக்கத்துக்கு
மாறாக எதுவும் நடந்துவிடக்கூடிய சூழல் இல்லாதபடியும் இருந்ததால், மேம்பாலம் மேலேறிச் சென்று வந்துவிடலாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம்.
மேம்பாலத்தின் இருபுறமும் மின்கம்பங்கள், கவுண்டமணியைக்
கண்ட கரகாட்டக்காரன் செந்தில் போல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தன. மெர்குரி விளக்குகள் மஞ்சள் ஒளி மழையைப் ஏகாந்தமாகப் பொழிந்துகொண்டிருந்தது.
மேம்பாலத்தில் ஏறுகையில், ரங்கநாதன் தெரு
இப்போது குப்பை கூளங்களற்று சுத்தமாக காணப்பட்டது. தேங்க்ஸ் டு துப்புரவு தொழிலாளர்கள். ஜிஆர்டி தங்க மாளிகை உள்ளிட்ட ஏனைய ஜுவல்லரி கடை செக்கியூரிட்டிகள் ஒன்று
கூடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். போத்தீஸ் ரோடு
வளைவில், போலீஸ்காரர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர
வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் சல்லடை போட்டும், துருவி துருவி விசாரித்துக் கொண்டிருந்தது.
இப்படியாக மணி ஒண்ணைத் தாண்டியும் தி.நகர்
ஒரு அமைதிப் பூங்காவைப் போலவும், மக்கள் நடமாட்டம் எப்போதும்
இருந்தபடி இருந்ததனால், நெல்சன் மாணிக்கம் ரோடு போக முடிவு
செய்தோம்.
நெல்சன்
மாணிக்கம் ரோடு
சூளைமேட்டில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் ரோட்டைப் பற்றி, குறிப்பாக
இரவு நேரத்தில் அந்த ரோட்டைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு மணி 11:00, அல்லது 11:30 க்கு மேல் நீங்கள் இந்த ரோட்டைக் கடக்க நேர்ந்திருந்தால், சாலை ஓரங்களில் உற்று நோக்கியிருந்தால் ஒருவேளை நான் சொல்ல வருவது பற்றி
உங்களுக்கு பொறி தட்டலாம். லயோலா கல்லூரி சப்வே தொடங்கி,
அமைந்தகரை ஸ்கைவாக் (SkyWalk) வரை உள்ள
சாலைதான் நெல்சன் மாணிக்கம் சாலை. இந்த சாலையில் தான்
பெரும்பாலான தமிழக மக்களுக்கு பரிச்சயமே இல்லாத தெலுங்கு நடிகர் சோபன் பாபு-வின் திருவுருவச்சிலை அமைந்துள்ளது. நான் சொல்ல
வருவது கண்டிப்பாக இவரைப் பற்றி அல்ல. இந்த சாலையின்
இருபுறமும், இரவு 11:30 க்கு மேல்,
கவர்ச்சியாக உடையணிந்த அழகான இளம் பெண்கள் ஆங்காங்கே
நின்றுகொண்டிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் இவர்கள்
பெண்கள் என்று தான் நம்புவீர்கள். உண்மையில் இவர்கள் க்ராஸ்
டிரெஸ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிற திருநங்கைகள்.
இவர்கள் குழுக்களாகவோ, தனியாகவோ நின்று கொண்டு, சாலையில் கடக்கும் ஆண் மகன்களுக்கு வலை விரிப்பார்கள். வலையில் அகப்பட்ட பசித்த சிங்கங்களை(?) இந்த மான்கள்
கவர்ந்து சென்று விருந்து வைக்கும். விசாரித்ததில், விருந்துக்கு 1500 ரூபாய் என்றும், அறையில் என்றால் 3000 ரூபாய் என்றாள் ஒருத்தி.
மேலும் விபரங்கள் கேட்க எண்ணுகையில் ”ரொம்ப
நேரம் இங்கு நிற்காதீர்கள், போலீஸ் தொல்லை” என்றாள். அவர்கள் வியாபாரத்தை கெடுக்கவேண்டாமென்று
எண்ணி விலகிச்சென்றுவிட்டோம். அவள் குரலில் ஒருவித மென்மை
இருந்தது. அதிகாரத் தோரணையோ, மிரட்டும்
தொணியோ இல்லை. பகல் நேரத்தில் நாம் பார்க்கும்
திருநங்கைகளுக்கு நேரெதிர் குணாதிசயங்கள் கொண்டிருந்தனர்.
அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து 300 அடி தள்ளி, சரியாக அந்த தெலுங்கு நடிகரின் சிலையருகே,
போலீஸ் எங்களை மடக்கி பிடித்தது. நான்
குடித்திருக்கிறேனா, இல்லையா என்று என் நலன் மேல் அக்கறை
கொண்டு, என்னை ஊதச்சொன்னார் போலீஸ்காரர். ஊதிக்காட்டிய பிறகு, ஏமாற்றமடைந்த அவர் பேப்பர்களை
சரிபார்த்துவிட்டு, பின் எங்களை அனுப்பிவிட்டார். அப்படியே இடப்பக்கம் திரும்பி, ஒரு சிறிய சந்து
வழியே மீண்டும் அவர்களை சந்தித்து பேச எண்ணினோம். சந்தின்
மூலை முடுக்குகளில், இருட்டினில் அங்காங்கே திருநங்கைகள்
தான் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மிரட்டி
வியாபாரம் செய்வதோ, தானாக பேச்சு வலிந்து பேச்சு கொடுப்பதோ
இல்லை. இஷ்டபட்டு வந்து பேசும் ஆண்களிடம் மட்டுமே
பேசுகின்றனர். இவ்விடத்தில் வரும்போது மட்டும் டூ வீலர்கள்,
கார்கள் மற்றும் கால்களுக்கு வேகம் குறந்துவிடும், அல்லது நின்றேவிடும்.
ஒரு வழியாக, ஒரு சந்தின் வழியே வந்து முன்பு பேசிய அதே
நங்கையை பார்த்துவிட்டோம். அவளிடம் சென்று, உண்மையில் நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னோம். சென்னை
இரவு வாழ்கையை பற்றியும், திருநங்கைகளின் பிண்ணனி மற்றும்
அவர்களின் இரவு வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் கூறினோம். அவளும் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டேயிருக்கும்போது அவள் கண்கள்
அங்குமிங்கும் அலைந்தது. அவள் இப்போது பிசியாக இருப்பதை
புரிந்துகொண்டு, பகல் நேரத்தில் அவளிடம் பேசுவதாகச்
சொல்லிவிட்டு அவளது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.
அதே தெருவில் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் டீ
குடித்துவிட்டு நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து கிளம்பி தி.நகர் விரைந்தோம்.
கிளம்பும் நேரம்
மணி இரண்டரை ஆகியிருந்தது. திநகர் இன்னும் அதே
அமைதிப் பூங்காவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு
டீக்கடை மட்டும் பாதி ஷட்டர் மூடியபடி, குழுக்களாக
வந்தவண்ணமிருந்த இளைஞர்களுக்கு டீ, சிகரெட்டுகளை
விநியோகிக்கும் சேவையை செய்துக்கொண்டிருந்தது. ஒருவித மயான அமைதி குடிகொள்ள ஆரம்பித்ததது. இன்னும் ஒரு மணி நேரம் சென்றால் கூட இவ்விடம் மீண்டும் சூடுபிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிடும். அரை மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டுவிட்டு,
3 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.
No comments:
Post a Comment