Thursday, May 22, 2014

"திங்கட் கிழமை" - சாத்தான் தேவதையான கதை


+1, +2 படித்துக்கொண்டிருக்கும்போதும், விடுமுறை மற்றும் ஞாயிறு முடிந்து கல்லூரி ஹாஸ்டலுக்கு திரும்பும்போதும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருத்தல் என்பது ரணக்கொடூரம். திங்கட்கிழமை லீவ்போட்டுவிட்டு நாள்முழுக்க தூங்கிவிடலாமென்று தோன்றும். ஆனால் வேறு வழியின்றி எழுந்து, மஞ்சள் நிற வெளிச்சத்தில் வேண்டாவெறுப்பாய் காண்டாமிருகம்போல் குளித்துவிட்டு, அம்மா கொடுக்கும் டீயை குடித்துவிட்டு, வாசல்வரை அம்மா வந்து எட்டி சகுனம் பார்த்து, எனக்கு டாட்டா சொல்லிவிட்டு, ஐந்தரை, ஆறு மணிக்கு விழுப்புரம் பஸ்டாண்டில் பஸ் ஏறி, காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி/சென்னை சென்று இறங்கினால் தான் திங்கட்கிழமை என்ற எமகாத எரிச்சல் அடங்கும்.

ஹாஸ்டல் நாட்களில் கூட வாரயிறுதிகளில் டி-நகர், தேவி தியேட்டர் என சுற்றிவிட்டு ஞாயிறு இரவன்று திங்களைப் பற்றி நினைக்கையில், அக்தர் பாலை எதிர்கொள்ளும் கங்குலி போல் கிடிகிடுவென்று நடுங்கும். அப்பயத்தைப் மறக்க டிவி ஹாலிலோ, நண்பனின் கம்பியூட்டரிலோ படம் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிப்போவேன். ஆனால் திங்கட்கிழமையை எப்படியாவது கடத்திவிட்டால், அடுத்து வருகிற நான்கு நாட்களை எதிர்க்கொள்ளக்கூடிய தைரியம் தானாகவே வந்துவிடும். இந்த திங்கள் சுழற்சி பள்ளி, கல்லூரி தாண்டி ஆறு வருட ஐ-டி வேலையிலும் தொடர்ந்ததுதான் முகேஷ்த்தன சோகம்.

+2ல நல்லா படிச்சி மார்க் வாங்கினா காலேஜ்-ல ஜாலியா இருக்கலாம்னு ஸ்கூல் வாத்தியார் சொன்னதும், காலேஜ்-ல நல்லா படிச்சி வேலை வாங்கிட்டா அப்புறம் லைஃப்ல செட்டில் ஆகிடலாம்னு புரொஃபசர் சொன்ன பொன்மொழிகளும் அடிக்கடி ஞாபகம் வந்து கடுப்பேற்றும். அதையெல்லாம் லெஃப்ட் கையால் தள்ளிவிட்டு, ரைட் லெக்-கால் மண்டே என்ற மெகா பூதத்தை எதிர்கொள்வேன். அந்த பூதம் என்னை அமெரிக்கா வரை வெள்ளை உருவில் விரட்டி வந்து என்னை மிரட்டியது. வீக்கெண்டில் மினியாபொலிஸ் டவுண்டவுன், இண்டியன் ரெஸ்டாரண்டில் இந்திய சாப்பாடு, வால்மார்டில் ஷாப்பிங், கார்மைக்கில் ஆங்கிலப் படம் என்று சரமாரியாகச் சுற்றிவிட்டு, அன்றிரவு மண்டே பற்றி நினைக்கையில், கிளையண்ட் மீட்டிங், வீக்லி ஸ்டேட்டஸ் மீட்டிங், டெலிவரி என ஆக்டோபஸ் கைகள் வந்து கழுத்தை நெரிக்கும்.

ஒரு கட்டத்தில் உங்க பூசாரித்தனமும், பொங்கச்சோறும் வேண்டாமென்று முடிவெடுத்தபின்னர்தான் (அதான், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு டாட்டா காட்டிவிட்டு இந்திய ஜனநாயகத்தில் மீண்டும் இரண்டறக் கலந்தது) பாலுமகேந்திரா, ராம், வெற்றிமாறன் போன்ற தேவதைகளில் கைகள் நீண்டு என்னை அரவணைத்தன. இது திடீர் முடிவல்ல. கல்லூரி முதலாமாண்டிலிருந்தே என் சினிமாக்காதலியை ஒருதலையாகக் காதலித்து வந்தேன். அவள் என்னை திரும்பி கண்கொண்டு பார்க்கவே பத்தாண்டுகள் ஆனது. இனிதான் கரம்பிடிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளி செல்லும் உணர்வு. 520 கசப்பான திங்கட்கிழமைகளுக்குப் பிறகு, சுதந்திரமான, அர்த்தமுள்ள திங்கட்கிழமைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

“ராம்” என்ற யூனிவர்சிட்டியில் சேர வாய்ப்பு கிடைத்தபோதுதான் கலங்கிய என் மனக்குட்டை தெளிவுற்றது. ஒரு தேனீ போல சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் சினிமாத்தேன் சேகரிக்க ஆரம்பித்தேன். ராம், எல்லா வகையான பூக்களிலிருந்தும் எங்களை தேனெடுக்க வைத்தார். எது தேன் என்பதே தெரியாமலிருந்த எனக்கு இதுதான் தேனென்று கூறினார். ஆனால் அதை அவர் எங்களுக்கு ஸ்பூனால் ஊட்டவில்லை. மண்டே என்ற பூதம் இப்போது கிட்டதட்ட இப்போது மறைந்தேவிட்டது. மண்டே மேட்னிகளில் சினிமா செல்லும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும். இன்ஸ்டிடியூட்டில் அமர்ந்து, ராம் ஆஃபீஸில் அமர்ந்து கதை விவாதிப்பது எத்தனை பாக்கியமான நிமிடங்கள். கிட்டத்தட்ட எது திங்கட்கிழமை, எது ஞாயிறு என்றே தெரியாமல் போனது.

அரசு துவக்கப்பள்ளியில் படித்த நான் ஹார்வர்ட் யூனிவர்சிட்டிக்கு சென்று ஏ, பி, சி, டி பயில ஆரம்பித்தேன். அதுதான் “தரமணி” படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு. அப்படத்தை பார்த்தே ஏ, பி, சி, டி கற்றுக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு வாக்கியம் அமைப்பது மட்டுமே பாக்கி. நான் எடுக்கப் போகும் எல்லா படங்களின் டைட்டில் கார்டும், “நன்றி பாலுமகேந்திரா”, “நன்றி ராம்” என்று துவங்குவதே சரியாக இருக்கும்.

Tuesday, April 1, 2014

கோடைகால நண்பன்


இது ஒரு நீண்ட நெடிய நாஸ்டால்ஜியா பதிவு. சன் மியூசிக் பார்த்துக்கொண்டே படிப்பவர்கள், சென்னை பத்ம சேஷாத்ரி ஸ்கூலில் படித்த(ப்ப)வர்கள், சமீபத்தில் காதலில் விழுந்தவர்கள் வெறும் ‘லைக்’ மட்டும் இட்டுவிட்டு இதைக் கடந்துவிடலாம்.

மழைக்காக கடைகளிலோ, பேருந்து நிழற்குடையிலோ ஒதுங்கி சலித்துக் கொள்பவர்களை விட, கோடைகால வெயிலுக்கு பயந்தொதுங்கி, அதன் உக்கிரம் தாங்காமல் மோர் (அ) கூல்ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு அதை சபிப்பவர்கள் தான் அதிகம். ஆனால், நானோ மழையை விட, வெயிலை அதிகம் ரசித்துக் கொண்டா(டுபவன்)டியவன். மழை என்பது வீட்டிலிருந்தபடி ரசிக்ககூடிய ஒரு அழகான நடிகை போல; ஆனால், வெளியே வந்தால் சகிக்க முடியாத, மேக்கப் கலைந்த நடிகையாகி விடுகிறாள். ஆனால், வெயில் அப்படி அல்ல, எப்போதும் ரசிக்கக் கூடிய காதலி போல. கோபமடைந்து உக்கிரமானாலும் ரசிக்கலாம். ஏப்ரல், மே சூரியனின் வெப்பம் தலையிலிறங்கி, உடல் முழுவதும் பரவி, உள்ளங்கால் வரை சென்று முடிகிற பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது.

என்பதுகளில் இறுதியில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கிராமத்தில் என் பால்யத்தை ஆரம்பித்தேன். ஜூன் முதல் மார்ச் வரை பல்வேறு பருவநிலைகளுக்கும், பருவத் தேர்வுகளுக்கும் உட்பட்டு, முழு ஆண்டுத் தேர்வை முடிப்பதற்குள் படாத பாடுகளைப் பட்டு, இலவு காத்த கிளி போல கோடை விடுமுறைக்காக காத்துக் கொண்டிருப்போம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமூக அறிவியல் என ஒவ்வொரு தேர்வின்போதும் விடுமுறையை எதிர்நோக்கிய தீவிர மனநிலை தொக்கி நிற்கும். சமூக அறிவியல் பரீட்சையில், பிரிட்டனையும், ஜப்பானையும்  மேப்’பில் மாற்றி குறித்துவிட்டு, இங்க் பேனாவால் நண்பர்களின் வெள்ளைச் சீருடைகளில் நீல நிற ஓவியங்களை வரைந்துவிட்டு, பரீட்சை அட்டையை வீட்டில் கொண்டு தூக்கி எறிகிறபோது வருகிற ஆனந்தம் ஆறு ஆடி கார் வாங்கினாலும் வராது. 

கடைசி பரீட்சை முடிந்த மதியமே கிரிக்கெட் ஃபீவர் பிடித்துவிடும். அம்மா துணி துவைக்க வைத்திருந்த மரத்தாலான கட்டையை பேட்’டாகவும், அப்பா/தாத்தா-வின் கைத்தறி நூல் மிச்சங்களைக் கொண்டு செய்த பந்தை எடுத்துக்கொண்டு விளையாட ஓடிவிடுவோம். கோடையாதலால் ஏரிக்கரையும், குளமும் நீர் வற்றி நாங்கள் விளையாடுவதற்கென்றே ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடும். வெற்றுடம்பே எங்களுக்கான ஜெர்சி. கிணறு, குளத்தில் எஞ்சியிருக்கும் தண்ணீரே எங்களுக்கான பெப்ஸி, கொக்ககோலாக்கள்.

எங்க ஊர் கிரவுண்டுகளைத் தவிர பக்கத்து ஊர் ஈடன் கார்டன், தர்மசாலாக்களிலும் போய் விளையாடுவதுண்டு. நாங்கள் ஆடும் கிரிக்கெட்டை, காலை, உச்சி, மாலை என வானத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து சூரியன் காசு கொடுக்காமல் பார்த்து கண்டு களிப்பான். நாங்கள் அவனை கண்டுகொண்டதே இல்லை. மேட்ச் முடிந்து, புழுதியை ஷூவாக மாட்டிக்கொண்டு, வீடு திரும்பி, என்னை தேடிக் களைத்த அம்மாவின் கையால் எனக்கே எனக்கென்று இருக்கும் டம்ப்ளரில் டீ குடித்தால்தான் அன்றைய நாள் முழுமையடையும்.
 
எங்கள் வீடு மாடி வீடு என்பதால், மொட்டைமாடியிலிருந்து உஷ்ணம் இறங்கி அறையினுள் வியாபித்து இருக்கும். ஃபேன், அதே உஷ்ணக் காற்றைத்தான் திரும்ப திரும்ப சுழல விட்டுக்கொண்டிருக்கும். இதனால், தெருவிலிருக்கும் கானிலிருந்து(அடி பம்ப்) குடம் குடமாக தண்ணீரை மொட்டை மாடி மற்றும் திண்ணைகளில் ஊற்றி குளுமைப்படுத்துவோம். சில சமயங்களில் மொட்டை மாடி (அ) திண்ணைகளிலேயே படுத்துறங்கி விடுவதுண்டு. கோடையில் குளிப்பதெல்லாம் பாத்ரூம் அறையில் இல்லை, அடிபம்பில் அடித்து தெருவிலேயே சுமார் இரண்டு மணிநேரம் குளிப்போம்.
 
கிரிக்கெட்டை அடுத்து கோடைகால அதீத எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று, பாண்டிச்சேரி-கதிர்காமத்திலுள்ள என்னுடைய அத்தை வீட்டுக்குச் செல்வது. என் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயம். பேருந்தில் அம்மா/அப்பா (அ) தாத்தா/பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு பாண்டிச்சேரி இறங்கி, அத்தை வீடு இருக்கும் தெருவில் நடக்கும்போது வருகிற அளவில்லாத மகிழ்ச்சி என்பது, நான்கு கிராண்ட் ஸ்லாமயும் ஒரே வருஷத்தில் வாங்கியதுக்கு ஒப்பானது. பாண்டிச்சேரியின் எல்லா சாலைகளின் ஓரத்தில் இருபுறமும் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருப்பது வித்தியாசமாகத் தோன்றும். அத்தை மகன்களுடன் அந்த செம்மண் பூமியில் கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிளில் ஊர் சுற்றுவது, முருகா, ஆனந்தா தியேட்டரில் படம் பார்ப்பது, செடில் திருவிழா என்று படு சுவாரஸ்யமாகச் இருக்கும்.
 
இதற்குள் இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து தொலைக்கும். பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது மறக்காமல் என் மாமா செலவுக்கு காசு கொடுத்தனுப்புவார். கிளம்ப மனமின்றி கிளம்புவேன்.  ஊர் திரும்பினால் கண்டிப்பாக பாஸ் ஆகியிருப்பேன். மூடியிருந்த பள்ளி ஜன்னலில் ரிசல்ட் ஒட்டியிருப்பார்கள். மீண்டும் அதே சுழற்சி. அடுத்த வகுப்பு, புது புத்தகங்கள், நோட் புக்குகள், காலண்டு, தீபாவளி, அரையாண்டு, பொங்கல், முழுஆண்டு அப்புறம் மீண்டும் அந்த கோடை.
 
இப்படியாக, பத்தாம் வகுப்பு, +2 வரை தொடர்ந்தது. கல்லூரி வந்தேன். காலங்கள், காட்சிகள் மாறின. கேம்பசில் வேலை கிடைத்து, நான்காண்டு கல்லூரி படிப்பை எப்படா முடிப்பேன் என்று முடித்து ஒரு மாதம் வீட்டில் கோடை விடுமுறையை கழித்தேன். அதே கோடை, அதே சூரியன்; ஆனால் ரசிக்க முடியவில்லை. ஆஃபர் லெட்டர், வொர்க் லொகேஷன் என்று மனம் பிதற்றிக்கொண்டிருந்தது. ஒரு மாதம் முடிவதற்குள்ளே வேலைக்கான கால்(Call) வந்தது. 2007 சம்மர். அன்று தொடங்கி 6 1/2 ஆண்டுகள் இடைவெளியில்லாத நீண்ட பயணம். பெயருக்குத்தான் வெகேஷன் லீவ். ஆனால் ஒருபோதும் எடு(த்த)ப்பதில்லை. ஒவ்வொரு சம்மரும் ஏ.சி ரூமில், கணினி மற்றும் மனித எந்திரங்களுக்கிடையே கழிந்தது. சூரியனை ரசிக்கக் கூட நேரமும், மனமும் இருக்காது. பத்து  ஆண்டுகளாக என்னைத் தேடி, களைத்து ஏமாந்து போயிருப்பான் சூரியன். காடுகளில், வயல்களில் இருக்கவேண்டிய காய், கனிகள், ஃப்ரிட்ஜ்-களில் அடைபட்டிருப்பது போல இருந்தேன்.
 
இதோ விழித்துவிட்டேன். 10 வருடங்கள் கழித்து, சுதந்திர கோடையை அனுபவிக்க மீண்டும் கிளம்பிவிட்டேன். தாயை நோக்கி சிரித்துக் கொண்டு முட்டி போட்டுக்கொண்டே ஓடும் சிறு மழலை போல, என் உற்ற தோழன் சூரியனை, பால்ய சிநேகிதனை ஆர்ப்பரித்து ஆரத்தழுவ ஆயத்தமாகிவிட்டேன்.

Wednesday, March 19, 2014

தராசு


   அம்பத்தூரிலிருந்து வேளச்சேரி சற்று அதிக தொலைவுதான் என்றாலும், என் பள்ளிக்கால நண்பன் முத்துக்குமரனை சந்திக்க போய்க்கொண்டிருப்பதால் அவ்வளவு தூரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை எனக்கு. நானும், முத்துவும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தோம். அவன் நன்றாகப் படித்து +2 வில் நல்ல மார்க் எடுத்து, அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்சினியரிங் படித்துவிட்டு இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். நானும் அவனளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராகப் படித்து, மேற்படிப்புக்காக ஊரைப் பிரிய மனமின்றி உள்ளூரிலேயே அதிக வசதியற்ற ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு, ஊர்க்காரர்களின் கேள்விக் கணைகளுக்கு பயந்து, இப்போது இந்த சென்னை மாநகரில் வேலைக்காக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு கட்டத்தில் பிடித்து போய் விட்டது. நண்பன் ரூமில் தனியாக இருக்கும் நேரத்தில், பஸ்சுக்கு மட்டும் போக வர காசு எடுத்துக்கொண்டு சும்மாவே சுற்றிவிட்டு வந்த நாட்களும் உண்டு. தோராயமாக இரண்டு வருடமிருக்கும் அவனைப் பார்த்து. இன்று காலை தான் அவனுக்கு ஃபோன் செய்தேன். அவனை பார்க்கத்தான் இப்போது மாநகரப் பேருந்தில் வேளச்சேரி சென்று கொண்டிருக்கிறேன்.

அவன் சொன்னபடி வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கி அவனுக்காக காத்திருந்தேன். பத்தாவது நிமிடத்தில், ஒரு கருப்பு நிற பல்ஸர் என்னை நோக்கி வந்தது. அவன்தான். தத்தம் நலன், மற்றும் குடும்ப நலங்களை விசாரித்தோம். எனது உள்வாங்கிய கண்ணும், சற்றே நொடித்த வயிறும் என்னுடைய பசியை அவனுக்கு சொல்லாமல் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நொடியே, “வா மச்சான், சாப்பிட போலாமென்றான்”. வேளச்சேரி ரயில் நிலையம் போகும் வழியில், பக்கவாட்டில் இரண்டு அரக்கன் போல், எதிரெதிரே கேஎஃப்சி-யும், மெக் டோணல்ட்-ம் ஒன்றுக்கொன்று போட்டியாக நின்று கொண்டிருந்தது. சுமார் எட்டு/பத்து வருடம் முன்பு இவ்விடத்தில் ஏரியும், முட்புதருமாக இருந்ததாக என் சித்தப்பா ஒரு முறை சொன்னதாக ஞாபகம். 

கேஎஃப்சி-யில் நுழைந்து இரண்டு சிக்கன் ஸிங்கர் மீல் ஆர்டர் செய்தான். 600 ரூபாய் பில் வந்தது. சேவை மற்றும் இதர வரிகள் மட்டுமே  80 ரூபாய். ஒரு வேளை சாப்பாட்டிற்க்காக 600 ரூபாய் அவன் செலவு செய்தது எனக்கு கோபமாகவும், ஒரு விதத்தில் என்னால் தான் என்பதால் வருத்தமாகவும் இருந்தது. சாப்பிட மனம் முழுவதுமாக ஒட்டவில்லையென்றாலும், அவனுக்காக முழுவதுமாக சாப்பிட்டு முடித்திருந்தேன். சாப்பாட்டை தட்டில் வீணாக்குவது, அவனுக்கும் சரி, எனக்கும் சரி பிடிக்காது. அவனிடமிருந்து எனக்கு தொற்றிய பழக்கம் தான் அது. எல்லா இடத்திலும் அவனே செலவு செய்து கொண்டிருந்ததால், ஒரு நுண்ணிய குற்றவுணர்வு என்னுள் வியாபித்திருந்தது. என் இயலாமையினால் விளைந்த உணர்வுதான் அது. என்னிடம் இருந்ததோ நான் திரும்பி போக பஸ்சுக்கு வைத்திருந்த 20 ரூபாய். அம்பத்தூருக்கு பஸ் டிக்கெட் விலை 15 ரூபாய். இதை வைத்துக்கொண்டு நான் அவனுக்காக என்ன வாங்கித்தந்துவிட முடியும்

சென்னை வந்ததிலிருந்து நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டிருந்தேன். முத்துவோ தொடர்ந்திருந்தான் என்பது அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்று இரண்டு சிகரெட் வாங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அது எனக்கு பெரிதாக ஆச்சர்யம் தரவில்லை. ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்டினான். நான் அதை நிராகரித்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவன் நான். 

பள்ளிக்கால வாழ்க்கை தொட்டு, நேற்று ரூமில் கொசு விடாமல் கடித்த கதை வரை எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தோம். அவனின் பேச்சிலும் சரி, உடல் மொழியிலும் சரி, தான் ஒரு பந்தாவான, பகட்டான வாழ்க்கை வாழ்கிறோம் என காட்டிக்கொள்ளாமல், அசால்ட்டாக என்னிடம் பழகியது என்னை ஆச்சர்யபட வைத்தது. என் நண்பனை பற்றி எனக்கு தெரியுமென்றாலும், இந்த ஊரைப்பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இருந்ததில்லை. மேற்கத்திய வாழ்வை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிற சென்னை மாநகரம் என் நண்பனை கொஞ்சம் கூட சலனப்படுத்தவில்லை. அவனின் கேஎஃப்சி பிரவேசம் மட்டும் விதிவிலக்கு. ஒருவேளை அவனுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த பகட்டு என்னிடம் இருந்திருக்கக்கூடும்.


நான் சொல்ல வந்தது அதுவல்ல. இரண்டு சிகரெட்டுக்கு காசு கொடுக்க 500 நூறு ரூபாயை நீட்டினான் முத்து. கடைக்காரன் சில்லறை இல்லையென கூறிவிடவே, சட்டென்று, “மச்சான் உங்கிட்ட இருக்காடா” என, என்னிடமிருந்த 20 ரூபாயை என் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு மீதி 4 ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துகொண்டு என்னிடம் இரண்டை திணித்தான். அவன் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்ததால், என்னை மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, அடிக்கடி ஃபோன் பண்ணுடா எனக்கூறிவிட்டு கிளம்பினான். எனக்கு, நான் திரும்பிபோக காசில்லை என்ற எண்ணத்தை விட, அவனுக்காக ஒரு 20 ரூபாயாவது செலவு செய்ய முடிந்த்தே என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவது இல்லை. இரண்டு நிமிடம் அங்கேயே உறைந்தபடி நின்று என்ன செய்வது என்று அறியாமல், என் கண்ணிலிருந்து முதல் கண்ணீர் துளி புறப்படும் முன்னரே அதை துடைத்துவிட்டு அம்பத்தூர் நோக்கி நடக்கத் துவங்கினேன். யூ-டர்ன் செய்துவிட்டு அதே ரோட்டில் மீண்டும் வந்த முத்து, என்னை கண்டு, வண்டியை நிறுத்தி ஒரு கணம் என் கண்களையே பார்த்தவன், எல்லாம் புரிந்தவனாய், “ஏறுடா பைக்கில” என்றான். இந்த முறை கண்ணிலிருந்து புறப்பட்ட கண்ணீர்துளி, துடைக்க அவகாசம் கொடுக்காமல், புவிஈர்ப்பு விசையினால் பூமி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.

சென்னை இரவுகள் @ தி.நகர்

                               
    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்குகிற தியாகராய நகர் () தி.நகர், சென்னையின் மிக முக்கியமான வணிகப் பகுதி. துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள், மாநகர பேருந்து நிலையம், மாம்பலம் ரயில் நிலையம், மற்றும் சில்லறை வணிக சிறு கடைகள் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற பகுதி.

அன்று திங்கள் கிழமை. இரவு 10 மணிக்கே, நாங்கள் மூவரும்  அங்கு சென்றுவிட்டோம். இரவு முழுவதும் அங்கு இருக்கவேண்டியிருந்ததினால், சாலையில் டூ வீலருக்கு உத்தரவாதம் இல்லையென்றெண்ணி, மாம்பலம் ரயில்வே பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு வரும் வழியில் உள்ளூர் பெருமாள் சாமி, நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார். அதே நேரம், பல பெருமாள் சாமிகள் இந்த உலகையே மறந்த நிலையில், டி நகரின் வீதியினூடே அழுக்கு சட்டை சகிதமாக, எந்தவித பிரக்ஞையிமின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது.
பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் எதிரே அமைந்த டீக்கடைக்கு சென்று டீ அடித்துவிட்டு பேருந்து நிலையம் நுழைகையில், பேருந்துகள் அனைத்தும் நாள் முழுக்க சென்னையை சுற்றிய களைப்பில் பெருமூச்சு விட்டு, பின்பு அடங்கின. மெல்ல மெல்ல ஆட்டோ எனப்படும் மஞ்சள் நிற வஸ்துக்கள் இப்போது பேருந்து நிலையத்தின் வாயிலை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. கடைசி பஸ்சை தவற விட்ட மக்கள், பெரும்பாலும் ஆண்கள், ஷேர் ஆட்டோவுக்காகவோ, இரவு நேர பேருந்துக்காகவோ கால் கடுக்க காத்திருந்தனர். இவர்களுக்கிடையில் ஒரே ஒரு, 40 வயது மதிப்பிடத்தக்க, பெண்மணி மட்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தாள். ஷேர் ஆட்டோக்காரர்கள், வடபழனியையும், கோயம்பேடையும் கூறுபோட்டு விட்டுக்கொண்டிருந்தனர். ஓரிரு டீக்கடைகள் மற்றும் இரவு நேரச்சிற்றுண்டி கடைகளை தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் மூடப்பட்டுவிட்டிருந்தன.

Employees of the Textile Giants

சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் என தி.நகரின் மிகப்பெரும் துணிக்கடலில் (நின்றுகொண்டு) வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் தத்தம் தோழன், தோழிகளோடு, அவர்களது கால்வலி பொருட்படுத்தாது, புன்னகையோடு அரட்டையடித்தபடி அவர்களது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் நடிகர், நடிகைகள், பார்த்த/பார்க்கபோகும் சினிமாக்களை பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. ரங்கநாதன் தெருவில், பகலில் மனிதர்கள் அலட்சியமாக விட்டுச்சென்ற, தூக்கியெறிந்த குப்பைகளை, அந்த குப்பைகளுக்கு கொஞ்சமும் பொறுப்பாகாத துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12:00

சிவப்புத் துணி போர்த்திய பானையில் குல்ஃபி ஐஸ் விற்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூன்று சக்கர வாகனத்தில் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தனர். மஞ்சள் நிற சிக்னல் விளக்குகள் தனக்கு பிடித்தமான காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் நொடிக்கொருமுறை கண்ணடித்துக்கொண்டிருந்தன. இந்த காதலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், கால் டாக்ஸிகள் மற்றும் டூ வீலர்கள் சிக்னலை வேகமாக பாய்ந்து கடந்து, மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தன.

கொசு தன் காதில் வந்து பாடிய இன்னிசை ராகத்தைக் கூட கேட்க விரும்பாமல், உலகிலேயே மிகவும் அழுக்கான போர்வை என்று அனைவரது பாராட்டையும் பெற்ற போர்வையை போர்த்திக்கொண்டு பேருந்து நிழற்குடையில் உறங்கிக்கொண்டிருந்தார் ஒரு மனிதர்.  அந்த 40 வயதுமிக்க பெண்மணி இன்னும் அதே இடத்தில், செல்ஃபோனை நோண்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது ஆட்டோக்காரகளிடம் சென்று முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பின் சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்தின் எதிரே சென்று நின்றுகொண்டாள். இதையெல்லாம், நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு கவனித்துக்கொண்டிருந்தேன்.

அதில் ஓர் ஆட்டோக்காரரை அணுகி, ”யாருங்க அந்த பொம்பள, ரெண்டு மணி நேரமா இங்கயே நின்னுட்டு இருக்காங்க, நைட் ரோந்து போலீஸா, இல்ல ஐட்டக்கார பொம்பளையாஎன்று நான் கேட்க, “தெரியலைப்பா, போலீஸா இருந்தாலும் இருக்கலாம், இப்பல்லாம் நைட் போலீஸ் கெடுபுடி அதிகம் இருக்குஎன்றார் அவர். அதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் ரோந்து வாகனங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளை சுழலவிட்டுக்கொண்டு சுற்றி வந்துகொண்டிருந்தன. ரொம்ப நேரமாக அங்கேயே உலவிக் கொண்டிருந்த எங்கள் மீதே சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. வெள்ளை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு மீசைக்காரர் எங்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு, பஸ்சை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல் இருந்துவிட்டோம். ஒரு வயதானவரிடம் அந்தப் பெண்மணி எதோ பேசிக்கொண்டிருக்கையில், தாம்பரம் போகிற இரவுப் பேருந்து ஒன்று சடேலென வந்து நிற்க, வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.

ஒரு மணிவரை இப்படி மனித நடமாட்டம் இருந்துகொண்டிருந்ததாலும், வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடந்துவிடக்கூடிய சூழல் இல்லாதபடியும் இருந்ததால், மேம்பாலம் மேலேறிச் சென்று வந்துவிடலாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம். மேம்பாலத்தின் இருபுறமும் மின்கம்பங்கள், கவுண்டமணியைக் கண்ட கரகாட்டக்காரன் செந்தில் போல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தன. மெர்குரி விளக்குகள் மஞ்சள் ஒளி மழையைப் ஏகாந்தமாகப் பொழிந்துகொண்டிருந்தது. மேம்பாலத்தில் ஏறுகையில், ரங்கநாதன் தெரு இப்போது குப்பை கூளங்களற்று சுத்தமாக காணப்பட்டது.  தேங்க்ஸ் டு துப்புரவு தொழிலாளர்கள். ஜிஆர்டி தங்க மாளிகை உள்ளிட்ட ஏனைய ஜுவல்லரி கடை செக்கியூரிட்டிகள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். போத்தீஸ் ரோடு வளைவில், போலீஸ்காரர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் சல்லடை போட்டும், துருவி துருவி விசாரித்துக் கொண்டிருந்தது.

இப்படியாக மணி ஒண்ணைத் தாண்டியும் தி.நகர் ஒரு அமைதிப் பூங்காவைப் போலவும், மக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்தபடி இருந்ததனால், நெல்சன் மாணிக்கம் ரோடு போக முடிவு செய்தோம்.

 நெல்சன் மாணிக்கம் ரோடு

சூளைமேட்டில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் ரோட்டைப் பற்றி, குறிப்பாக இரவு நேரத்தில் அந்த ரோட்டைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு மணி 11:00, அல்லது 11:30 க்கு மேல் நீங்கள் இந்த ரோட்டைக் கடக்க நேர்ந்திருந்தால், சாலை ஓரங்களில் உற்று நோக்கியிருந்தால் ஒருவேளை நான் சொல்ல வருவது பற்றி உங்களுக்கு பொறி தட்டலாம். லயோலா கல்லூரி சப்வே தொடங்கி, அமைந்தகரை ஸ்கைவாக் (SkyWalk) வரை உள்ள சாலைதான் நெல்சன் மாணிக்கம் சாலை. இந்த சாலையில் தான் பெரும்பாலான தமிழக மக்களுக்கு பரிச்சயமே இல்லாத தெலுங்கு நடிகர் சோபன் பாபு-வின் திருவுருவச்சிலை அமைந்துள்ளது. நான் சொல்ல வருவது கண்டிப்பாக இவரைப் பற்றி அல்ல. இந்த சாலையின் இருபுறமும், இரவு 11:30 க்கு மேல், கவர்ச்சியாக உடையணிந்த அழகான இளம் பெண்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் இவர்கள் பெண்கள் என்று தான் நம்புவீர்கள். உண்மையில் இவர்கள் க்ராஸ் டிரெஸ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிற திருநங்கைகள்.

இவர்கள் குழுக்களாகவோ, தனியாகவோ நின்று கொண்டு, சாலையில் கடக்கும் ஆண் மகன்களுக்கு வலை விரிப்பார்கள். வலையில் அகப்பட்ட பசித்த சிங்கங்களை(?) இந்த மான்கள் கவர்ந்து சென்று விருந்து வைக்கும். விசாரித்ததில், விருந்துக்கு 1500 ரூபாய் என்றும், அறையில் என்றால் 3000 ரூபாய் என்றாள் ஒருத்தி. மேலும் விபரங்கள் கேட்க எண்ணுகையில் ரொம்ப நேரம் இங்கு நிற்காதீர்கள், போலீஸ் தொல்லைஎன்றாள். அவர்கள் வியாபாரத்தை கெடுக்கவேண்டாமென்று எண்ணி விலகிச்சென்றுவிட்டோம். அவள் குரலில் ஒருவித மென்மை இருந்தது. அதிகாரத் தோரணையோ, மிரட்டும் தொணியோ இல்லை. பகல் நேரத்தில் நாம் பார்க்கும் திருநங்கைகளுக்கு நேரெதிர் குணாதிசயங்கள் கொண்டிருந்தனர்.

அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து 300 அடி தள்ளி, சரியாக அந்த தெலுங்கு நடிகரின் சிலையருகே, போலீஸ் எங்களை மடக்கி பிடித்தது. நான் குடித்திருக்கிறேனா, இல்லையா என்று என் நலன் மேல் அக்கறை கொண்டு, என்னை ஊதச்சொன்னார் போலீஸ்காரர். ஊதிக்காட்டிய பிறகு, ஏமாற்றமடைந்த அவர் பேப்பர்களை சரிபார்த்துவிட்டு, பின் எங்களை அனுப்பிவிட்டார். அப்படியே இடப்பக்கம் திரும்பி, ஒரு சிறிய சந்து வழியே மீண்டும் அவர்களை சந்தித்து பேச எண்ணினோம். சந்தின் மூலை முடுக்குகளில், இருட்டினில் அங்காங்கே திருநங்கைகள் தான் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மிரட்டி வியாபாரம் செய்வதோ, தானாக பேச்சு வலிந்து பேச்சு கொடுப்பதோ இல்லை. இஷ்டபட்டு வந்து பேசும் ஆண்களிடம் மட்டுமே பேசுகின்றனர். இவ்விடத்தில் வரும்போது மட்டும் டூ வீலர்கள், கார்கள் மற்றும் கால்களுக்கு வேகம் குறந்துவிடும், அல்லது நின்றேவிடும்.

ஒரு வழியாக, ஒரு சந்தின் வழியே வந்து முன்பு பேசிய அதே நங்கையை பார்த்துவிட்டோம். அவளிடம் சென்று, உண்மையில் நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னோம். சென்னை இரவு வாழ்கையை பற்றியும், திருநங்கைகளின் பிண்ணனி மற்றும் அவர்களின் இரவு வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் கூறினோம். அவளும் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டேயிருக்கும்போது அவள் கண்கள் அங்குமிங்கும் அலைந்தது. அவள் இப்போது பிசியாக இருப்பதை புரிந்துகொண்டு, பகல் நேரத்தில் அவளிடம் பேசுவதாகச் சொல்லிவிட்டு அவளது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அதே தெருவில் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் டீ குடித்துவிட்டு நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து கிளம்பி தி.நகர் விரைந்தோம்
  
கிளம்பும் நேரம்  


மணி இரண்டரை ஆகியிருந்தது. திநகர் இன்னும் அதே அமைதிப் பூங்காவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு டீக்கடை மட்டும் பாதி ஷட்டர் மூடியபடி, குழுக்களாக வந்தவண்ணமிருந்த இளைஞர்களுக்கு டீ, சிகரெட்டுகளை விநியோகிக்கும் சேவையை செய்துக்கொண்டிருந்தது. ஒருவித மயான அமைதி குடிகொள்ள ஆரம்பித்ததது. இன்னும் ஒரு மணி நேரம் சென்றால் கூட இவ்விடம் மீண்டும் சூடுபிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிடும்.  அரை மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டுவிட்டு, 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.

Thursday, February 13, 2014

பாலு மகேந்திராவும் அவரின் ஒரு மாணவனும்..


இது இரங்கற்பா அல்ல. இரை தேடி ஒரு குருவி மிகப்பெரிய ஆலமரத்தில் வந்து அமர்ந்த கதை. 2010 (அ) 2011 -ல் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் சேர விழைந்து, சில காரணங்களால் சேர முடியாமல் போனது. கொஞ்சம் காசு சேர்த்துவிட்டு நுழைவோம் என்று 2013 ஜூனில் அரை மனதோடு அமெரிக்கா பறந்தேன். நான்கே மாதத்தில், சென்னையில் இருந்த சினிமா காந்தம் அமெரிக்காவிலிருந்த என்னை இழுத்துக்கொண்டுவிட்டது. வந்த கணமே அவர் இன்ஸ்டிடியூட்-க்கு ஃபோன் செய்துவிட்டேன் அடுத்த ஃபில்ம் மேக்கிங் கோர்ஸ் எப்போ ஆரம்பம் என்று. அடுத்த நாளே அப்ளிகேஷன் போட அவரது இன்ஸ்டிடியூட் சென்றேன் (2013 தீபாவளி முதல் நாள் என்று ஞாபகம்). வெறும் அப்ளிகேஷன் ஃபில்லிங் தான் என்று நினைத்த எனக்கு, அன்றே எதிர்பாராமல் அவரோடு நேர்முகத்தேர்வும் நடந்தது. அவர் அறையில் நுழைந்தவுடனே அவர் காலில் விழுந்துவிட்டேன். சினிமா பற்றிய என் அறிவை, புரிதலை அவர் தெரிந்துகொள்ள சில கேள்விகளை கேட்டார். நானும் எனக்கு தெரிந்த பதிலை அளித்தேன். நான் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச, என்னுடைய தமிழ் அவருக்கு பிடித்திருக்கிறது என்றார். அப்போதே என்னை தேர்வு செய்துவிட்டார்.  நிறைய புத்தகங்களை ப்டிக்குமாறு அறிவுறுத்தினார். கிளம்புகையில் மீண்டும் அவர் காலில் விழுந்து தரிசித்துவிட்டு கிளம்பினேன்.

ஜனவரி 20, 2014 அன்று வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் அறிமுகம் என்பதால், அவரே ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லி எங்களை படம் பிடித்தார் (5டி கேமராவில்). அன்று முதல் தினமும் அவரே எங்களுக்கு பாடம் எடுப்பார். வேறு யாருமல்ல. திரைக்கதை எழுதுவது, கேமரா பேசிக்ஸ், எடிட்டிங், இயக்கம் என ஒவ்வொரு க்ளாசிலும் அழுத்தம் திருத்தமாக பாடமெடுப்பார். தினமும் ஒரு திரைப்படம் வீதமாம எங்களுடன் அமர்ந்து பார்ப்பார். இன்னும் சினிமாவைக் கற்றுக்கொண்டிருப்பவன் போல.

ஒரு வாரம் கழித்து கால் சற்று தடுமாறி விழப்போய் இடது கண்ணுக்கு கீழ் லேசாக அடிபட்டது. அப்பவே சற்று கலங்கி போனோம். நான்கு நாட்களில் நன்றாக திரும்பி வந்த மனுஷன், விட்ட பாடத்தை சனிக்கிழமைகளில் எக்ஸ்ட்ரா வகுப்பு வைத்து முடித்தார். ஓளிப்பதிவு வகுப்பில், ஃபோகஸ் பற்றி விளக்க, என்னை வைத்து, என் பெயரை உச்சரித்து பாடம் எடுத்தபோது  எனக்கு சிலிர்த்துவிட்டது. 10, 20 முறை என் பெயரை உச்சரித்து இருப்பார்.

வீடு:

அன்று வீடு படம் திரையிட்டார். எங்களுடன் அமர்ந்து பார்த்தார். முன் நாள் சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டிருந்தது. வீடு படம் அப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன். வீடு மாதிரியான, நேர்த்தியான, யதார்த்தமான, நேர்மையான படைப்பை இவ்வளவு நாள் எப்படி நான் மிஸ் செய்திருந்தேன். "வீடு படத்தில் உங்கள் குரு சத்யஜித்ரே-வை மிஞ்சி விட்டீங்கள்" என உணர்ச்சிவசப்படாமல், முகஸ்துதி போல் அல்லாமல் அவர் கண்ணை பார்த்து கூறினேன். அவர் தன் புன்னகையில் என் கருத்தை நிராகரித்தார்.

அழியாத கோலங்கள்:

அழியாத கோலங்கள் இரண்டு நாள் கழித்து எங்களுடன் பார்த்தவிட்டு, டைம் மெஷின் ஏறி அவரின் விடலை பருவத்துக்கு சென்று வந்திருக்கிறார் என்பது அவர் பேச்சிலிருந்து தெரிந்தது.

எப்போதும் ரே, இளையராஜா, மூன்றாம் பிறை, குரோசவா, டேவிட் லீன் பற்றிய பேச்சுகள் அதிகமிருக்கும். நல்ல சினிமா என்று தான் நினைக்கும் இடத்துக்கு அருகாமையில் எங்களை இட்டுச்சென்றார். அவ்வாறு தான் பாலா, வெற்றி, விக்ரம், ராமசுப்பு ஆகியவர்களையும் இட்டுச்சென்றிருக்கிறார்.

கடைசி வகுப்பு:

அன்று CREATIVITY (படைப்பாற்றல்) க்ளாஸ். சாமன்யனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள வித்தியாசம், படைப்பாளியின் உந்துதலுக்கான ஆரம்பப்புள்ளி, படைப்பு மற்றும் படைப்பாளிக்கான விதை பற்றி பேசினார். பேச்சுவாக்கில், "ஒரு படைப்பாளி, தன் படைப்பின் உச்சத்தில் இருக்கும் போதே செத்துவிடவேண்டும்" என கூறினார். தனது DOWNFALL-ஐ பார்க்க எந்த கலைஞனும் விரும்பமாட்டான் என்றார். வகுப்பு முடிந்து கிளம்புகையில் எதேச்சையாக, தற்செயலாக அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். தேசம் போற்றும் ஒரு ஒளிப்பதிவாளன் தன் வாழ்நாளில் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.

கடைசி நாள்:

வழக்கம் போல சினிமா பட்டறைக்கு சீக்கிரமே சென்றுவிட்டேன். உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கேட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு பறந்தேன். பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பாலா மட்டும் பார்த்துவிட்டு வந்து கண்ணை துடைத்துக்கொண்டு கீழே வந்து சேரில் அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சு என்று யாரும் சொல்லவில்லை. 50 கிலோ எடை என் இதயத்துக்குள் புகுந்து கொண்டது. ஃபியூனரல்-க்கு ரெடி செய்கிறார்கள் என்ற செய்தி காற்றில் வந்து, காதில் விழுந்து, தொண்டையை முற்றிலுமாக அடைத்துக்கொண்டது. மாறாக கண்களில் மட்டும் என்னை அறியாமல் அருவி போல கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருந்தேன். கண்ணீர் ஒரு தொற்று வியாதி, என்னிடமிருந்து பலரிடமும், மற்றவரிடமிருந்து என்னிடமும் அழுகை தொற்றிக்கொண்டது.

சினிமா பட்டறையில் அவரை கிடத்தியிருக்கையில், அவர் கை, கால்களையே பார்த்துகொண்டிருந்தேன். ஒரு மிராக்கிள் நிகழ்ந்து அவரின் கை, கால்கள் அசைந்து துள்ளி எழமாட்டாரா என நம்பிக்கொண்டிருந்தேன்; எழவில்லை.

இவையனைத்தும் வரக்கூடாத ஒரு கெட்ட கனவை நான் காண்பது போலவும், காலையில் எழுந்து வழக்கம் போல சினிமா பட்டறை போய் அவரின் மழலை சிரிப்பை பார்க்கமாட்டேனா என ஏங்கிக்கொண்டிருக்கிறேன். ஆம், நான் அந்த கெட்ட கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

விதை:

அவர் விதைத்த நூற்றுக்கணக்கான விதைகளில், மிகச்சிறிய விதையை நான் பெற்றிருந்த போதிலும் அது விருட்சமாக வெளிவர எத்தனித்துக்கொண்டிருக்கிறது.

Sunday, December 22, 2013

தலைமுறைகள் - ஒரு அனுபவம்


இது தலைமுறைகள் படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்படம் என்னிடம் இட்டுச்சென்ற/கூடவே இருக்கின்ற உணர்வுகளை பற்றிய பதிவு. 4 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்துவிட்டேன். பாலுமகேந்திரா & இளையராஜா என்ற இரு காந்தங்கள் மட்டுமே என்னை தியேட்டருக்கு இழுத்து வந்தது. படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னரே சென்றுவிட்டேன். சத்யம் வாசலில் அமர்ந்துகொண்டு 'தலைமுறைகள்' போஸ்டரையே பார்த்துகொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த ராம்லீலா, தூம்3 போன்ற போஸ்டர்கள் என்னை சிறிதும் சஞ்சலப்படுத்தவில்லை.
அரங்கம் உள்ளே நுழைந்ததும், பெரும்பாலும் நடுத்தர வயது மக்கள் தத்தம் மக்களோடு வந்திருந்தனர் ,சில முதியவர்கள், சில இளைஞர்கள். ஒரு ஆங்கில கார்டூன் படத்திற்கு வந்திருந்ததை போல நிறைய பொண்டு பொடிசுகளையும் பார்க்க முடிந்தது சற்றே ஆச்சர்யம் தான்.
கேனான் 5டி(6டி??) கேமரா என்பதால் அவரின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட லுக். ஆனால் அவரின் ஸ்டைல் ஆஃப் ஃபில்ம் மேக்கிங் முதல் காட்சியிலிருந்தே தெரிந்திவிடுகிறது. அங்குமிங்கும் அலையாத ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்பட்ட கேமரா, பாத்திரங்களின் இயல்பான உரையாடல் மற்றும் மேக்கப் என ரெகுலர் பாலுமகேந்திரா டச். காட்சிகள் நகர, நகர கதை மெல்ல மெல்ல நமக்குள் நம்மையறியாமல் வளர்ந்துகொண்டிருந்தது. சலனமற்ற தெளிந்த நீரோடையை போல திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள்.

பாலுமகேந்திரா என்ற நடிகன்:
சுப்பு கதாப்பாத்திரத்துக்காக, முதல் முறையாக தன் தொப்பியையும், கண்ணாடியையும் துறந்து (?) தன் முழு அடையாளத்தை நமக்கு காட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா. சாதி, மதம் மற்றும் தமிழ் மீது அதீத பற்றுள்ள, தன் பிள்ளையையே வீட்டை விட்டு விரட்டிய அரக்க மனம் கொண்ட கிழவனாக பாலு. தன் பேரன் வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் இளகி, பேரனுடனான தன் கடைசிகாலத்தில் அனுபவங்களை பகிர்ந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்த வாழ்வை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். அவரின் கண்கள், அதுவும் இந்த வயதில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவையா. தன் கண்கள் மூலமே, நம்மை சிரிக்க வைக்கிறார், உச் கொட்டவைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழ வைக்கிறார். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பேரனுக்கு தமிழ் கற்றுத்தருகிறார், பேரனிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்.
"மழையில், தானும், தன் பேரனும் நனைந்து கொண்டிருக்கையில், இது தன்னுடைய கடைசி நாளாக இருக்கக்கூடும் என எண்ணி, தன் பேரனை அழைத்து, "இந்த தாத்தாவ மறந்தாலும், தமிழ மறந்துடாதப்பா....", எனும்போது என் கண்ணீர், தொண்டை வரை பயணித்துவிட்டது.

இளையராஜா:
நீரோடையை போல ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளுக்கு கொஞ்சமும் இடையூறாக இல்லாமல் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது பிண்ணனி இசை. மொத்தமே 10 இடங்களில் மட்டும் பிண்ணனியில் இசை ஓலித்திருக்க கூடும். தாத்தா-வும் பேரனும் முதல் முறையாக சந்தித்துக்கொள்ளும் காட்சிக்கான இசையே போதும் ராஜா ஏன் இன்னும் "ராஜா" என்று சொல்ல. ராஜா-வின் அரியணையில் யாரும் அவ்வளவு சீக்கிரம் அமர்ந்துவிடமுடியாது. அந்த அரியணை ஆயிரம் வருடம் கழித்தும் காலியாகவே இருக்கும் என்பது நிதர்சனம்.

படம், பார்க்க ஒரு நாடகம் போன்ற ஒரு லுக் தெரிதாலும், துளியும் நாடகத்'தன்மை'யற்று இருப்பதே இப்படத்தின் சிறப்பு. பாலுமகேந்திரா பாத்திரமும், அவரின் கண்களுமே இப்படத்தின் உயிர்நாடி.

தன் தலைமுறையிலிருந்து இந்த தலைமுறைக்கு பாலம் அமைத்து அதிலே அன்பையும், பாசத்தையும், தமிழயும் கடத்தியிருக்கிறார். இப்படத்தை ரசிக்க நமக்கு இப்படியொரு தாத்தா இருந்திருக்க வேண்டுமென்றோ, தாத்தா-வுடன் இத்தகையான உணர்ச்சிகளை பரிமாறியிருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. அதெல்லாம் இல்லாமலே, நம்மை நெகிழ்ச்சியடையச்செய்துவிடுகிறார்.

"இது இந்த தலைமுறையினர்க்கான படமல்ல, ஆனால் இந்த தலைமுறைக்கான படம்"

என் பக்கத்து சீட்டிலிருந்த ஒரு 4 வயதுமிக்க குழந்தை படம் முழுக்க தன் அப்பாவிடம் கேள்வி கேட்டுகொண்டிருந்தாள், "ஏன் அவர் ரிவர்-ல குளிக்கிறார், இப்ப எந்த தாத்தா செத்துபோனார், திருக்குறள்-னா என்ன?" என்றவாறு. சிறு குழந்தையயும் படத்தில் எங்கேஜ் பண்ணியிருக்கிறார். சற்றே வளர்ந்த அரைவேக்காடுகளுக்கு இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகமே.
பல இடங்களில் சிரிப்பலைகள், சில இடங்களில் கைதட்டல்கள். படம் முடிந்த கணத்தில், ஒரு சின்ன பையன்  எழுந்து (குடும்பமாக வந்திருப்பார்கள் போல) , "அப்பா, தாத்தா எங்க"?? என்றான்.. அப்போது வெளியே நடந்துகொண்டிருந்த நான், இரு வினாடிகள் நின்று அச்சிறுவனை பார்த்துவிட்டு பிறகு நகர்ந்தேன். இம்முறை ஐந்தாவது முறையாக அழுதிருந்தேன்.

தியேட்டரை விட்டு வெளியே வருகையில், ஒரு மனைவி தன் கணவனின் கைகளை பற்றி, "ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம் பார்த்த மாதிரி இருக்குங்க" என்றாள். ஒரு செண்டிமீட்டர் புன்னகையை என்னுள் உதிர்த்துவிட்டு பைக் எடுக்க சென்றேன்.

Tuesday, December 17, 2013

வேகாஸ்... நல்ல வேகாஸ்


திரும்பி பார்த்தேன், அனைவர் முகத்திலும் ஏக்கம் நிறைந்த சோகம். இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு போகலாமா என்றெண்ணிக்கொண்டே கூட வந்தவர்களிடம் கேட்க முனைந்த போது,  “ஐ ஆம் கோன்ன மிஸ் திஸ் பிளேஸ் பேட்லி டூட்..” பதில் வந்தது. அனைவரும் ஆமோதிப்பது போல் தலையசைத்தார்கள். ஆம், திரும்பி வர யாருக்கும் எண்ணமில்லை. என்ன செய்ய.. வேறு வழி இல்லை, நாளை ஆபீஸ் போகணும்., டாலரும் தீர்ந்தாகிவிட்டது. புன்னகையோடு ட்ராலி பொட்டியை உருட்டினோம்.

4 நாட்களுக்கு முன்னால்--

செக்கின் பேக் 20 Kg -க்குள் இருக்க வேண்டும். மூன்று பேர் துணிமணிகள், ஷூ, பற்றாக்குறைக்கு ஷிஃபூ, தினேஷின் ப்லேசர்ஸ் ஆகியவற்றை போட்டு அமுக்கியாயிற்று. எடை போட்டு பார்த்தால் 18 Kg-ல் வந்து நின்றது. தூக்கி காரில் போட்டுக்கொண்டு விரைந்தோம் MSP ஏர்போர்டுக்டு. லாஸ் வேகாசில், பணம் பேப்பர் வடிவில் தான் பேசும். கிரெடிட்/டெபிட் கார்டு யூசேஜ் ரொம்ப கம்மி; ப்ளஸ் டேக்ஸ்(Tax) வேறு. ஆதலால், முன்னரே ஆளுக்கு ஆயிரம் டாலர்கள் பேங்குக்கு போய் எடுத்தாயிற்று. 

Chapter 1: The Great Disappointment

ஐடி செக்கிங் - என் முகமும், பாஸ்போர்டில் உள்ள முகமும் ஒன்று தானா என ஏற இறங்க பார்த்தார் செக்யூரிட்டி. அவர் தன் கடமையை தானே செய்யறார்னு நானும் பதிலுக்கு பல்ல இளிச்சேன். பேக் செக்கின் செய்துவிட்டு, டிக்கெட் பெற்றுக்கொண்டு, டெர்மினலை அடைந்தோம். பிளைட் 2 மணி நேரம் தாமதம். சரியென்று, திரும்பினால் பார் + ரெஸ்டாரன்ட்; எல்லார் மூஞ்சிலயும் சந்தோஷம். கனநேரத்தில் அனைவரும் பாரில். சம்மிட், லீனன்கூகல்ஸ் என அடித்துவிட்டு திரும்ப போய் விசாரித்தால் பிளைட்டு 5 மணிநேரம் லேட்டாமாம். “டேய், நாங்க வேகாஸ் போய்ட்டு லாஸ் ஏஞ்சலஸ் போவணும்டா”னு திட்டிகிட்டே, வேற வழி இல்லாம அங்கயே உக்காந்துட்டு இருந்தோம். சுத்தி என்ன நடக்குதுனு பாத்தா, வெள்ளகாரன் அவன்பாட்டுக்கு இங்கிலீசு புக்கயோ, ஐபேடயோ நோண்டிட்டு இருந்தாய்ங்க. பட், நம்மாளுங்கதான் அவிங்க ஆளோட(ஆளா, ஒய்ப்பானு தெர்ல) ஜலபுல ஜங்க்ஸ். இதுக்குமேல வேணாம். அதுக்கப்பறம் கொஞ்ச நேரம் நான் தூங்கியேவிட்டேன்.  திடீர்னு பாத்தா, ஒரே சலசலப்பு. என்னனு கேட்டா, பிளைட்டு கேன்சலு. சிக்காகோ-ல வானிலை சரியில்லையாம். அமெரிக்கா ரமணன் சொல்லிட்டாராம். எல்லாரும், அதிருப்தியோடு டிக்கெட் காசை திரும்ப பெற (அ) அடுத்த நாளுக்கான டிக்கெட்டை ரீ-புக் செய்ய சென்றார்கள். லாஸ் ஏஞ்சலஸ் பிளான் காலி. அடுத்த நாள் (சனிக்கிழமை) இரவு, அதே பிளைட்டுக்கு புக் பண்ணிட்டு, ஏமாற்றத்தோடு வெள்ளி இரவே வீடு திரும்பினோம். புண்பட்ட நெஞ்ச மறுபடியும் பீர் உட்டு ஆத்திட்டு தூங்கிட்டோம். 


Chapter 2: The Dancing Flight, the Pilot & the Lightning

அடுத்த நாள் மதியம் வரை தூங்கி எழுந்து, சிக்கன் செஞ்சு சாப்டு, மறுபடியும் ஏர்ப்போர்டுக்கு ஓட்டம். அதே செக்யூரிட்டி, அதே செக்கிங், அதே பிளைட்டு, இந்த டைம் மிஸ் ஆவாதுங்ற மாதிரி, பிளைட்டு சீக்கரமாவே வந்துருச்சி. குலதெய்வத்த கும்புட்டுட்டு ஏறி உக்காந்தோம். கொஞ்ச தூரம் மேல ஏறின வரைக்கும் நல்லாதான் போய்ட்டு இருந்துச்சி. நமிதா நடக்க ஆரம்பிச்சிடுத்தோ என்னவோ எழவு, பிளைட்டு ஆட ஆரம்பிச்சுடுத்து. ட்ரைவர் ஓட்டி பழகறான் போல. டேய், நீ ஓட்டி பழக நாங்களாடா கெடைச்சோம். நான் ஜன்னல் ஓரம் வேற; எட்டி பாத்தா, தூரத்துல இந்த மின்னல் பயபுள்ள வேற, மேகத்துல ஒண்ற குலோமீட்டருக்கு கீறல் போட்டுட்டு இருக்கான். பிளைட்டு வேற, மேல போவுது; கீழ வருது, மேல போவுது கீழ வருது. கேட்டா ஏர் டர்புலண்ஸ்-ஆ மாம். ஆத்தாடி, அவ்ளோதானா நம்ம லைப்பு. வாழ்க்கைல உருப்படியா ஒன்னுமே பண்ணலியே(பாக்கலியே). எங்க ஊர்ல இருக்கற மாரியாத்தா, காளியாத்தா, என்னோட சொந்த ஆத்தா எல்லாரயும் கும்பிட ஆரம்பிசிட்டேன். வயித்துல உருண்டையா ஒண்ணு, மேலயும், கீழயும் போய் வருது. சில பேரு சைனீஸ்ல கத்தறானுக, சில பேரு இங்கிலீசுல சிரிக்கரானுக. கொஞ்ச நேரத்துல திருச்சி பைப்பாஸ்ல போற மாதிரி ஸ்மூத்தா போச்சு. புயலுக்கு பின் அமைதி. அப்றொம், கொஞ்ச நேரம் ராசா பாட்ட கேட்டுட்டு தூங்கிபுட்டேன். வேகாஸ் கிட்ட வர்ற மாதிரி இருந்துச்சி. மேகங்கள் விலகி, தூரத்துல பாத்தா, கண்ணை ஆர்ப்பறிக்கும் மின் விளக்குகள்; கல்யாண் ஜுவல்லர்ஸ் இருக்கற எல்லா தங்கத்தையும் உருக்கி ரோட்டுல ஊத்துனா மாதிரி தங்க பிழம்புகள். ஒரே சீரான நேர்கோட்டில் அமைந்த, நன்கு திட்டமிடப்பட்ட சாலைகள். ஆயிரம்கோடி மின்மினிபூச்சிகள் பறக்கும் நகரம். மூணு மணி நேர பயணம். தரையிறங்கி, டாக்சி புடிச்சி ஹோட்டலுக்கு விரைந்தோம். போற வழியெல்லாம் ஹோட்டல்ஸ் ஜகஜோதியா மின்னுது. நாங்க புக் பண்ணின ஹோட்டலான ஃப்ளமிங்கோ-வை அடைந்தோம். எற்கனவே ஆன்லைன்ல புக் பண்ணி வச்சிருந்த ரூம, ஒரு மணி நேரமா நின்னு வாங்கிட்டு (அம்புட்டு கூட்டம்),  30-வது புலவர்(ஃப்ளோர்)-கு போய் தஞ்சம் புகுந்தோம். இங்கிருந்து சிட்டி-ல இருக்கற முக்கியமான ஹோட்டல்களை பார்க்கலாம் உ.ம் சீசர்ஸ் பேலஸ், தி மிராஜ்.

Chapter 3: The First Casino Experience

வேகாஸின் முக்கியானமான என்டர்டைன்மென்ட் விஷயங்கள்னு பாத்தா கேசினோஸ், ஸ்ட்ரிப் க்ளப்ஸ் (கரைட்டு, அதே க்ளப் தான்), பப்/பார் டேன்ஸ் க்ளப்ஸ், அப்றோம் மேஜிக் & அதர் ஷோஸ், மெடாமே டுஸ்ஸாட்ஸ் (அதான் பிரபலங்கள்-லாம் பொம்மையா நிக்க வச்சிருப்பாய்ங்களே). மணியோ இரவு 1. ஃபர்ஸ்டு கேசினோ-குள்ள நுழைஞ்சோம். வரிசையா கம்பீட்டர் கேம் டப்பாக்கள், சக்கரத்துல துக்குனூண்டு பால(Ball) சுத்த உட்டு விளையாடற கேம் (Roulette), அப்றோம் டேபிள்-ல சீட்டுகட்டு வச்சி விளையாடற கேம் (Poker & Black Jack). 18 வயது நிறைவடைந்த யோ-யோ இளைஞர்கள் மொதக்கொண்டு, அறுவது வயது ஆயா, தாத்தா வரைக்கும் எதோ ஒரு கேமை விளையாடிக்கொண்டிருந்தார்கள். நான் இதுவரை இதுல ஒரு கேம் கூட விளையாண்டது இல்ல.



பெரிசுகள்-லாம் கம்பீடட்ர் பொட்டில இருக்கற பட்டன தட்டி தட்டி, எதையோ விளையாடிட்டு இருக்குங்க; என் கூட வந்த பசங்க ரௌலட் (Roulette) விளையாட போனாங்க. நானும் சரி, என்னதான் கேமு இதுனு பாக்க ஆரம்பிச்சேன். ஒரு சக்கரம் சுத்திகினே இருக்குது, அதுல சின்ன பந்த, ஆப்போசிட் டைரக்சன்-ல உருட்டி விடறாப்ல. பந்து சர்கிலா சுத்தி, வேகம் குறைந்து, இருக்கற 36 நம்பர்ல ஒரு நம்பர் மேல வந்து நிக்குது. அந்த நம்பர்-ல பணத்த கட்டுன பக்கிகளுக்கு காசு கிரெடிட் ஆய்டுமாம். பந்து ஒண்ணே ஒண்ணாம், ஆனா, நம்பர் மட்டும் 36-ஆம். போங்கடா-ன்னிட்டு, அடுத்து ப்ளாக்-ஜாக் கேமு. இது இன்னா மேட்டருன்னு கொஞ்ச நேரம் நின்னு பாத்துகினு இருந்தேன்; அட நம்ம 21 கேம். ஆனா, இது கொஞ்சம் அட்வான்ஸ்டு வெர்ஷன். ஒரு கைக்கு மினிமம் பத்து டாலர் வச்சி விளையாடனும் (சில டேபிள்-ல பத்த விட கம்மியாவும் இருக்கு, அதிகமாவும் இருக்கு). சரி, நாமளும் விளையாடுவோம்னு, ஒரு டேபிள்-ல உக்காந்தேன்(தோம்).  டேபிள் டீலர், "கேன் யூ ஷோ யுவர் ஐடி ப்ளீஸ்" அப்டின்னு இளிச்சுது. 18 வயசுக்கு மேல இருந்தா தான் விளையாடனுமாமாம். துட்டு வச்சி  விளையாடரோம்ல, தட் இஸ் ஒய். மொதல்ல, ஒரு 20 டாலர் வச்சி விளையாடுவோம்னு, டாலர குடுத்தா, அதுக்கு பதிலா காய்ன்ஸ் குடுத்துச்சி அந்த சைனாக்காரி. அஞ்சி நிமிஷம் தான்பா விளையாண்டேன்; அம்புட்டும் காலி. அடுத்து 50 டாலர எடுத்து; 4 மணி நேரமா விளையாடினேன்; கடைசில அதே 50 டாலர்தான் டேபிள்-ல இருந்துச்சி. மணிய பாத்தா அதிகாலை ஐந்து மணி. தூக்கமே வரல. என்னடானு விசாரிச்சா, அந்த ஏரியா ஃபுல்லா அருமையான ஆக்ஸிஜன நெரப்பி, நம்மள பளீர்னே வச்சிருக்கானுங்க. அது போக, ஃப்ரீ ட்ரிங்க்ஸ் வேற. ம்க்கும், வெளங்கிச்சி. சரினு மேல போய் தூங்கலாம்னு நானும் வடிவேலும் டேபிள விட்டு கெளம்பினோம். அந்த 50$ காய்ன்ஸ, கேஷியர்-ட குடுத்து, மறுபடியும் காசாவே வாங்கிட்டு ரூம்-கு போய் தூங்க சென்றோம். 

Chapter 4: The First Day @ Vegas

அடுத்த நாள் காலை 10 மணியளவில் எந்திரிச்சி, குளிக்க போனா, பாத்-ரூம்பு ஃபுல்லா கண்ணாடியாலயே செஞ்சிருக்காய்ங்க. வெளிய இருந்து பாத்தா உள்ள தெரியுது; உள்ள இருந்து பாத்தா வெளிய தெரியுது. “டேய், இதெல்லாம் சோடியா வாரவிங்களுக்கு தாண்டா கரெக்டா இருக்கும். நாங்க ஒன்லி ஆம்பளைஸ் தாண்டா வந்திருக்கோம்; வெளங்கிச்சி. சரின்னுட்டு, எப்படியோ மானத்த மறைச்சி குளிச்சிபுட்டு, டிப்-டாப்பா ரெடி ஆகி, சிலப்பல போட்டோ செஷன்-கள முடிச்சிட்டு, காலை உணவு சாப்பிட போனோம். சிபோட்லே (Chipotle; Mexican Food) – வாய்ல வைக்க முடியாது. பக்கத்துல பாண்டா எக்ஸ்ப்ரஸ் (Chinese Food) – இது கொஞ்சம் பெட்டர் அப்டின்னுட்டு நூடுல்ஸ், சிக்கன்-கள உள்ள தள்ளிட்டு, வெளிய சுத்தி பாக்க கெளம்பினோம். ரெண்டு குரூப்பா பிரிஞ்சி, ஒரு குரூப்பு மெடாமே டுஸ்ஸாட்ஸ், நாங்க, இன்னொரு குரூப் பிரபல ஹோட்டல்ஸ் சுத்தி பாத்துட்டு, வேற ஒரு ஹோட்டல்-ல கெசினொ விளையாடி, 40, 50 டாலர் தேத்திட்டு, ரூம்புக்கு ரெஸ்ட் எடுக்க வந்துட்டோம் (ஏன்னா, நைட் ஃபுல்லா முழிச்சிருக்கணும் இல்லையா, ஸ்ட்ரிப் க்ளப்-ல; அதுக்கு தான்). 

Chapter- 5: The Strip Club & the Seven Men

ஸ்ட்ரிப் க்ளப்-குனு தனியா ப்ளான் எதுவும் போடல. இங்க வந்து பாத்துக்கலாம்னு விட்டுடாரு, எங்க ப்ளானிங் குரு, வீர்பாகு. ஏன்னா, ஒவ்வொரு ஹோட்டல்-காரனும் வாசல்-லயே 11 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்திருக்கிறார்கள் ஆள் புடிக்கறதுக்கு. சார் லோன் வங்கறீங்களா சார், க்ரெடிட் கார்ட் வாங்கறீங்களா சார் அப்டின்ங்கற மாதிரி, ஸ்ட்ரிப் க்ளப் ஆஃபர்ஸ் எக்கச்சக்கம். 25 டாலர்ஸ் ஃபார் என்ட்ரி வித் ஃப்ரீ லிமோ (Limo), 2 ட்ரிங்ஸ் அண்ட்  சரக்கு பாட்டில். லிமோ-வ பத்தி சொல்லியே ஆகனும். லிமோ-னா நீண்ட கருப்பு நிற (mostly), Highly Sophisticated Caaar; ஒன்லி ஃபார் ப்ரெசிடென்ட் ஒபாமா, ரிச் பிசினெஸ் மென் இவிங்க தான் ஊஸ் பண்ணுவாங்கனு நெனைச்சிட்டு இருந்தேன். ஆனா, வேகாஸ்-ல ஃப்ரீயாவே டாட்டா இண்டிகா மாதிரி ஷிஃப்ட் அடிக்கறாய்ங்க; அதுல ஏறி உக்காந்ததும் என்னா ஒரு ஃபீல்-ங்கற. நாங்க என்னவோ பெரிய விஐபி மாதிரியும், எதோ போர்டு மீட்டிங்கி அட்டெண்ட் பண்ண போற மாதிரியும்., (சொ.பு.மொ.நா உள்ள போயி பொண்ணுங்க அவுத்து போட்டு ஆடறத கண்ணு முழிச்சி பாக்க போவுது, இதுகளுக்கு பகுமானத்த பாரு’-அப்டின்னு நீங்க சொல்றது கேக்குது). இருந்தாலும் அது ஒரு எபிக் ஃபீலிங்கா தான் இருந்துச்சி. அவன் ஃப்ரீயா குடுத்த சரக்கு பாட்டில ஷீஃபூ (குவின்) கிட்ட குடுத்து வச்சிருந்தோம். நாங்கள்ளாம் கைல பச்ச குத்திட்டு உள்ள வந்துட்டோம், பட் ஷீஃபூ-வ காணோம். செக்கியூரிட்டி உள்ள உடல. ஏன்னா, வெளி சரக்கு அலோவுடு இல்லயாம். டேய், நீங்க தானடா குடுத்து உட்டீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. அது வேற டிப்பார்ட்மெண்ட்-டாம். சரி, அந்த சரக்க பத்திரமா டோக்கன் போட்டு வச்சிட்டு (!), எல்லாரும் அந்த சொர்கத்துக்கு உள்ள நுழைஞ்சோம்.

75 சதவிகிதம் இருட்டு, 80 சதவிகிதம் ஆடை களைய ரெடியாக இருக்கும் பெண்கள், 20 சதவிகிதம் ஆடை களையப்பட்ட மேடை நடன அழகிகள். அவளை சுற்றி, மதுவை கையிலேந்தி, அந்த மாதுவை கண்ணால் கண்டு களிக்கும் ஆண்கள். மேடையில் ஆடும் பெண்ணை அந்த ஆணுக்கு பிடித்திருந்தால் அவன் ஓரிரு டாலர்களை வீசுவான். அவளும் அவனுக்கு தனிக்கவனம் செலுத்தி நடனமாடுவாள். அவனும் வாயிலிருந்து ஜொள் ஊற்றுவது  தெரியாமல் தொ(தோ)ல்பொருள் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பான்.

ஏழு பேரும் தனித்தனியே அமர்வதென முன்பே முடிவு செய்திருந்தோம். அப்படி இருந்தால் தான் கூச்சமின்றியும், ஃபிகரை சீக்கிரம் உஷார் செய்யலாம், இல்லை இல்லை அந்த ஃபிகர் நம்மை உஷார் செய்யும். நானும் ஃப்ரீயா குடுத்த டிக்கெட்ட வச்சி ஒரு ஹெய்னிக்கென் பீர் வாங்கி ஒரு டேபிள்-ல உக்காந்தேன். ரெண்டு நிமிஷம் கழிச்சி திரும்பி பாத்தா, கூட வந்த பசங்க ஒரு பயலயும் காணோம். என்னடானு பாத்தா பசங்க உஷார் பண்ணப்பட்டு, மேட்டர முடிச்சிட்டு, “ஷப்பா, இப்டி ஏழு நாலும் செய்யனும்” (சந்த்ரமுகி ரஜினி வாய்சில்), அப்டிங்ற ரேஞ்சில வந்தாய்ங்க. பண்ணது என்னமோ லேப் டேன்ஸ் (Lap Dance) தான். அதாவது, நம்மள சோஃபா-ல உக்கார வச்சி அந்த மங்கை தன் கொங்கைகளை நம் மேலே படும்படி நடனமாடுவாள். பேக்ரவுண்டில் சாங் ஓடிக்கொண்டிருக்கும். ஒரு பாட்டு முடியும் வரை தான் விளையாட்டு, அதன் பின் அவளே கேட்பாள் "டூ யூ வான்ட் டு கன்டினியூ" என்று. இவரது நடனம் உங்களுக்கு பிடித்திருந்தால், கையில் டாலர் இருந்தால் உடனே அவளுக்கு சிக்னல் செய்யவும் 'யெஸ்' என்று. மறுபடியும் சாங் ஸ்டார்ட் ஆகும், ஃபன்-னும் ஸ்டார்ட் ஆகும். ஒரு வழியாக, இரண்டு சாங் முடித்துவிடு டேபிளுக்கு திரும்பியபோது, நம்ம பசங்க 4, 5 சாங் என முடித்திருந்தார்கள். இன்னும் சில பசங்க எக்ஸ்ட்ரா ஹவர்ஸ் வேற. நடத்துங்கடா-ன்னிட்டு, மறுபடியும் ஒரு ஹெய்னிகனை வாங்கிக்கொண்டு அமர்ந்தபோது, ஸ்ட்ரிப் மேடையில் இரண்டு பர்த்டே பாய்(?!)களை அழைத்தார்கள். எப்போதும் பர்த்டே பாய்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதுண்டு. அவர்கள் இருவரையும் ஒரு சேரில் அமரவைத்துவிட்டு, ஒரு நாலு ஸ்ட்ரிப்பர்ஸ்.... ம்ம்ம்ம்.. இதுக்கு மேல வேண்டாம்.. இதெல்லாம் பாத்து முடிச்சிட்டு, அதிகாலை 3 மணி இருக்கும், வெளிய வந்து  திரும்ப அதே லிமோ-வில் ஹோட்டல் போய் சேர்ந்து தூங்கிவிட்டோம்.

Chapter-6 லாபம் தந்த ப்ளாக்-ஜாக் கேம் 

அடுத்த நாள் எந்த அஜெண்டா-வும் இல்லை. கண்டமேனிக்கு திரிவது என்ற முடிவு. எனக்கோ, திரும்பவும் கேசினோ கேம்ஸ் ஆடவேண்டும் என்ற ஆவல், வடிவேலு-வும் சரி என்றான். கேசினோ விளையாடும் இடம், மிகப்பெரிய பரப்பளவில், எங்கு பார்த்தாலும் ஆளுயர கேம் பொட்டிகள், போக்கர் (Poker), ப்ளாக்-ஜாக் (Black-Jack) டேபிள்கள் என ஜக-ஜோதியாக ஆனால் ஒருவித ஒழுங்கோடு இருக்கும். எப்போதும் கூட்டமாக உள்ள டேபிள்களில் அமர்வது உசிதம், அப்போது தான் வெற்றிவாய்ப்பு சற்றே அதிகம். அந்த இடத்தில் அமர்ந்து ஆடுவதே ஒரு வித புத்துணர்வையும், பரவச நிலையையும் கொடுக்கும். ஒரு டேபிளை கண்டறிந்து அமர்ந்தேன். என்னோட பாஸ்போர்ட்ட டேபிள் டீலரிடம் காண்பித்துவிட்டு, 100 டாலர்களை அவளிடம் நீட்டினேன். மாறாக என்னிடம் இருபது 5 $ காய்ன்களை கொடுத்தாள். 10$ மினிமம் பெட். அதிலிருந்தே ஆரம்பித்தேன். ஜெயிக்க, ஜெயிக்க பெட் கட்டும் தொகையை அதிகப்படுத்தினேன். ஹிட் அடித்துக்கொண்டே இருந்தேன். சில சமயம் விடவும் செய்தேன். ஆனால், முதலுக்கு மோசமில்லாமல், சற்று லாபத்துடன் தான் ஆடிக்கோண்டிருந்தேன். இடையிடையில், ட்ரிங்க்ஸ் சப்ளை செய்ய அழகிகள் வந்து கொண்டிருப்பார்கள். ஃப்ரீ தான். எவ்வளவு வேண்டுமென்றாலும் கேட்டு வாங்கி குடிக்கலாம். நாம் இருக்கின்ற டேபிளுக்கே வரும். நாம் விளையாடுகிற டேபிள் கொஞ்ச கொஞ்சமாக காலியாவது (தோற்றவர்கள் வேறு என்ன செய்ய!!!) தெரிந்ததும் நாமும் அடுத்த (கூட்டமான) டேபிளுக்கு மாறி விட வேண்டும். அது தான் புத்திசாலித்தனம். எப்படியும் அன்று முழுவதும் அந்த கேசினோவிலே 6 மணி நேரம் விளையாடி, அலைந்து திரிந்து, 6,7 டேபிளுக்கு மாறி 170$ (கிட்டதட்ட 10,000 ரூபாய்)-கள் லாபத்தோடு கேமிலிருந்து எழுந்தேன், அதுவும் மனசில்லாமல். இரவு மேஜிக் ஷோ வேறு இருக்கிறது.

Chapter- 7 The Magic Show

Penn & Teller மிகவும் புகழ்பெற்ற மேஜிக் ஜாம்பவான்களாம். இவரது ஷோ வேகாஸில் தினமும் அரங்கேரும். கூட்டமும் அலைகடலென திரண்டு வருமென்று சொன்னார்கள். எங்க குருப்-ல வீரபாகு எற்கனவே இந்த ஷோவை பார்த்துவிட்டதால் அவர் வரவில்லை, ஆனால் அந்த ஷோ நடக்கும் இடம் (Rio - ரியோ) ரொம்ப பக்கம் தான் என்று கூறியதால் நடந்தே செல்ல ஆரம்பித்தோம். நடந்தோம், நடந்தோம் நடந்து கொண்டே இருந்தோம், வந்தபாடில்லை. ஒருவழியாக வந்து சேர்ந்து, டிக்கெட் (60$) ஐ வாங்கிக்கோண்டு உள்ளே சென்றோம். நோலனின் The Prestige படத்தில் பார்த்தது போன்ற ஒரு அரங்கம். நாங்கள் தான் கடைசியாக சென்றடைந்தோம். மெஜீஷியன்கள் அறிமுகமாகி, சில வியத்தகு மேஜிக்குகளை காண்பித்தார்கள், Gun Shooting, Shadow Flower Cutting, Disappear, Mind Reading என பெரும்பாலும் நம்மால் கண்டுபிடிக்க/யூகிக்க இயலாத மேஜிக்குகள். சில மேஜிக் நமக்கே சொல்லப்பட்டுவிட்டு, நம் கவனத்தை திசை திருப்பி அதிலும் மேஜிக் காண்பித்தனர். ஷோ முடிந்து, அந்த மெஜீஷியன்களிடம் பலரும் பேசிக்கோண்டிருந்தார்கள். நாம் இந்தியர்களாயிற்றே, சும்மா விடுவோமா, எட்றா ஃபோட்டோ என்று அவர்களிடம் ஃபோட்டோவே எடுத்துகொண்டோம். ஹோட்டல் திரும்பியதும், சிலர் மறுபடியும் ஸ்ட்ரிப் க்ளப் போலாம் மச்சான் என்றார்கள். எனக்கோ, கேசினோ தான் விளையாடவேண்டும் என்ற ஆசை, இல்லை இல்லை பேராசை, ஏனென்றால் லாபம் பார்த்தாகிவிட்டது. மறுபடியும் ஒரு 200, 300 டாலர்களவது பார்த்து விடவேண்டுமென்ற ஆசை. காலை 6 மணி வரை, வேறு எந்த கேமும் விளையாடாமல், ப்ளாக்-ஜாக் மட்டுமே விளையாடினேன். 170 $ லாபத்தை மட்டும் வைத்து விளையாடி, 300 $ ஜெயித்து அதை மறுபடியும் வைத்து விளையாடி, தோற்று, அதை பிடிக்க மீண்டும் விளையாடி, கைய்யிருப்பு 100$ யையும் தோற்றேன்.  மணியோ காலை 6:30. சரி தூங்கலாம் என்று எழுந்தால், என் கூட வந்த இன்னொரு பையன் இன்னும் விளையாடிக்கோண்டிருந்தான். அவன் எழுந்து வருவதாயில்லை. நானும், வடிவேலுவும் போய் தூங்கிவிட்டோம். ஏனென்றால், இன்று தான் கடைசி நாள்.. இன்றிரவே ஃப்ளைட் பிடிக்க வேண்டும் மினியாபொலிஸுக்கு.

Chapter- 8  (Madame Tussaud's)

இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கினேன். காலைல தூங்காம ஆடிக்கொண்டிருந்த அந்த பையன் இன்னும் வரல. கீழ போய் பார்த்தா இன்னும் விளையாடிக்கொண்டிருந்தான். ரூம் வெக்கேட் பண்ணியாச்சி. ஆனா, பேக்-லாம் வைக்க ஒரு தனி இடம் இருக்கு. அந்த பையன போய் ஒரு ஸ்விம்மிங் பூல்-ல போய் தூங்க சொல்லிட்டு, நாங்க  10 மணியளவில்  மெடாமே டுஸ்ஸாட்ஸ் பார்க்க கெளம்பினோம். அதாங்க பிரபல நட்சத்திரங்களோட மெழுகு உருவ சிலைகளை வச்சிருப்பாங்களே. ஒரு DSLR கேமராவை எடுத்துகொண்டு உள்ளே நுழைந்ததும் ஜேமி ஃபாக்ஸ் எங்களை வரவேற்றார். அதாங்க ஜாங்கோ அன்செயிண்ட் (வேட்டையன் -தமிழில்)-ல நடிச்சிருப்பாரே அவரு. அச்சு அசல் அப்டியே அவரே நிக்கற மாதிரி இருந்தது, அவ்ளோ தத்ரூபம். ஹைட், கலர் டோன் எல்லாம் அப்படியே இருந்தது. அப்டியே அவர் கூட நின்னு ஒவ்வொருத்தரா ஃபோட்டோ எடுத்திகிட்டோம். லெஃப்ட்-ல திரும்பினா வில் ஸ்மித் உக்காந்து இருந்தார், போக போக ஜெனிஃபர் லோப்பஸ், ப்ரிட்னி ஸ்பியர்ஸ், ரிஹானா, மைக்கேல் ஜாக்சன், டைகர் வுட்ஸ், ஆன்ரே அகாஸி என எல்லோரும் நின்றபடி சிரித்துகொண்டோ, வேறு எதோ பண்ணிகொண்டோ இருந்தார்கள்.



எங்க கூட வந்த வடிவேலு எல்லா பொம்மைங்க கூடவும் ஃபோட்டோ எடுப்பதில் ரொம்ப ஆர்வமாயிருந்தான். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவி தோள் மேல் கைபோட்டு ஃபோட்டோ எடுத்துகொள்வான். அப்படியே போய்க்கொண்டிருக்கையில் நெசமான வெள்ளக்காரன் மனுசன் ஒருத்தர் மேல கைய்ய போட்டு, எங்கள பாத்து இப்ப எட்றா போட்டா என்றானே பார்க்கட்டும்; நாங்கள் அனைவரும் ஆளுக்கொரு மூலைக்கு சென்று கெக்கபுக்கோ, கெக்கபுக்கோ என சிரித்தோம். ஆனால், அந்த பெருந்தன்மை மிக்க வெள்ளக்காரன் அதை பெரிதாகவே எடுத்துகொள்ளாமல், சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு கிளம்பிவிட்டார். நாங்களும் மற்ற பொம்மைகளிடம் வித விதமாக, மைக்கேல் ஜாக்சன் உடை அணிந்தும், விண்டேஜ் காரில் அமர்ந்தும், ப்ரிட்னி கரம் பிடித்தும், டைகர் வுட்ஸிடம் கோல்ஃப் விளையாடியும் மகிழ்ந்தோம். பிறகு, தி வெனெடியனில் நுழைந்தோம். அங்கு மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. வெனிஸ் நகரையே அங்கு உருவாக்கியிருந்தார்கள், அந்த ஏரியா முழுவதும் வானம் போல ஃபால்ஸ் சீலிங் போட்டு, குளுகுளுவென, எப்போதும் பகல் போல் காட்சியளித்தது. ஓப்பெரா பாடல், படகு சவாரிகள் என அந்த இடமே ஒரு குட்டி வெனிஸ் போல் காட்சியளித்தது. வழக்கம் போல் புகைப்படங்களை க்ளிக்கி-விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.

Chapter- 9 சூது என்ற 'மயக்கும் போதை'

நாங்கள் வேகாஸை விட்டு கிளம்ப இன்னும் 8 மணி நேரம் தான் இருக்கிறது. அனைவரும் ரூமுக்கோ, அல்லது வேறு எங்கோ சென்று விட்டார்கள். எனக்கோ, "டேய் தம்பி இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு அதுக்குள்ள ஜெயிச்சி சுருட்டிட்டு ஓடிர்றா கைப்புள்ள-னு" எனக்கு நானே சொல்லிட்டு, தனியா டிட்டாஜ் ஆகி வந்துட்டேன். இந்த முறை வேற கேசினோ. கேம் ரூல்ஸ்-லாம் இப்ப எனக்கு அத்துபடி; எப்பிடியும் ஜெயிச்சிர்லாம் என்ற நம்பிக்கை மிகுந்த மமதை வந்தது. முதலில் 5$ டேபிளில் அமர்ந்தேன். சக டேபிளாளிகள் அனைவரும் பெண்கள், அதுவும் வேற்று நாட்டவர் போல் தெரிந்தார்கள்; பேசும் ஆங்கிலத்தை வைத்து யூகித்தேன். இம்முறை சற்று நிதானித்து யோசித்தே ஆடினேன். ஆட்டத்தின் சைடு பெட் (Black Jack +3 Poker) உபயோகித்து ஆடினேன். . அதாவது என்னுடைய இரண்டு கார்டும் டீலரின் மேல் கார்டும் ஒரு குறிப்பிட்ட பேட்டர்னில் இருக்க வேண்டும். அதாவது, ஒரே வரிசை, ஒரே பூ என, 4 வகை இருக்கிறது. உச்சபட்ச ஜாக்பாட் (Straight Flush) என்பது அடுத்தடுத்த நம்பரில், ஒரே பூவில் அமைவது. மேலும் விவரமாக சொல்ல வேண்டுமென்றால்...


இந்த மெதேடை அவ்வப்போது யூஸ் பண்ணி 50$, 100$ என ஜெயித்தேன். சற்று திருப்தியோடு அந்த டேபிளை விட்டு எழுந்து, என் ஆஸ்தான ஆடுகளத்துக்கே சென்றேன். 

கூட்டி கழித்து பார்த்தால், இதுவரை எனக்கு ஜெயிப்பும் இல்லை, தோப்பும் இல்லை. பர்ஸில், கொண்டுவந்த 600$ இருக்கிறது. ஒரு டேபிளில் அம்ர்ந்தேன் ஒரு தேர்ந்த கேம்ப்ளர் போல். டீலர் ஒரு கறுப்பின பெண்மணி; அழகாய் புன்னகைத்து வரவேற்றாள். என் அருகிலிருந்த வெள்ளையன் நான் முன்பு ஆடினது போல் சைடு பெட் (+3 Poker) உபயோகித்து ஆடி, அதிக பெட் கட்டி அபாரமாக ஜெயித்துக்கொண்டு இருந்தார். அந்த டீலர் பெண்மணியும் அவரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். நானும் அவ்வாறே விளையாடவே என்னையும் உற்சாகப்படுத்தினார். இம்முறையில் (+3 Poker) ரிஸ்க் கொஞ்சம் அதிகம்; ஆனால் சரியாக அமைந்தால் லாபம் பன்மடங்கு அதிகம். மற்றவர்கள் ரெகுலர் ப்ளாக் ஜாக் ரூல்ஸ் படியே விளையாண்டனர். ஒரு கட்டத்தில் என்னருகிலிருந்தவர் ஜெயித்தவரை போதுமென்று கிளம்பிவிட்டார்.

+3 போக்கரில் அடிக்கடி அதிகம் வைத்து விளையாடினேன், அதில் எனக்கு விழவே இல்லை. 100$ அம்பேல்; அடுத்த 100$ எடுத்தேன்; அதுவும் காலி. விடவில்லை அடுத்த நூறு. +3 போக்கர் இப்போது விழுந்தது; 2nd Most Jackpot (Straight) அடித்தது டாலர்கள் மல்டிப்ளை ஆனது. விட்டதை கொஞ்சம் பிடித்தேன். நடு, நடுவில் கோக் மட்டுமே ஆர்டர் செய்தேன்; லிக்கர் ஃப்ரீ தான் என்றாலும் அதை குடிக்கவில்லை. கவனம் சிதறக்கூடாது என்று. பெட் அமவுண்டை அடிக்கடி கூட்டி குறைத்தும் விளையாடினேன், ஆனால் 30$-க்கு மேல் ரிஸ்க் எடுக்கவில்லை. இம்முறை 10 டாலர் +3 போக்கரில் வைத்தேன், அந்த டீலர் பெண்மணி என்னை பார்த்து இம்முறை அடிக்கும் என்று எனக்கு நம்பிக்கையளிதாள். என் கார்டுகள் 5 & 6 ஹார்டின். அவள் திருப்பபோகிற கார்ட் 7 ஹார்டின் அல்லது 4 ஹார்டினாக இருந்தால், 300 டாலர்கள் எனக்கே எனக்கு. ஏனென்றால் டாப் மோஸ்ட் ஜாக்பாட்டிற்கான (Straight Flush) பாஸிபிலிட்டி அது.  அவள் என்னை பார்த்துக்கொண்டே கார்டை திருப்பினாள், நான் "எஸ்" கத்தினேன், ஆமாம், அவளோட கார்ட் 7 ஹார்டின். ஸ்ட்ரெயிட் ஃப்ளஷ். அவளும் புன்னகைத்து எனக்கு சியர்ஸ் செய்தாள். சக கேம்ப்ளர்களும் "குட் ஜாப், படி" என்றார்கள். நான் அவர்களுக்கு ஒரு புன்னகையை வீசினேன். டீலருக்கு அவ்வப்போது டிப்ஸ் வைப்பது இல்லாமல் இப்போது அவளுக்கு 20 $ டிப்ஸ் கொடுத்தேன். அடிக்கடி டேபிள் டீலர்கள் மாற்றப்படுவது வழக்கம் என்பதால் இந்த பெண்மணி எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி விடை பெற்றாள். 

அவள் விட்டுச்சென்ற இடத்தை வேறொரு ஆள் வந்தார், இப்போது தைரியமாக பெட் தொகையை அதிகரித்தேன், சைடு பெட்டிலும். ஆனால், காய்ன்கள் சிறிது சிறிதாக கரைந்தது. ஒன்றும் ஒழுங்காக விழவில்லை; டீலரே ஜெயித்துக்கொண்டிருந்தார், பிதாமகன் சூர்யா ஜெயிப்பது போல. அவ்வப்போது கொசுறு போல ஜெயித்தேன்; மற்றபடி பேரிழப்பு தான். எனக்கோ இத்தோடு முடித்துக்கொள்வோம் என்ற மனசு கொஞ்சம் கூட வரவேயில்லை. இன்னும், இன்னும் என மனசு கேட்டுகொண்டேயிருந்தது. டாலராசை ஒருபுறமிருந்தும், கேமும் படு சுவாரஸ்யமாக இருந்தது. விளையாடுகின்ற இடமும், சூழலும் ஒருவித மயக்க/பரவச நிலையை தந்தது. காமத்தில் மூழ்கியிருக்கிற போதையை விட ஒரு மடங்கு அதிகமாகவே தந்தது. இன்னும் 200 டாலரே என்னிடம் எஞ்சியிருந்தது. வடிவேலு என்னை கண்டுகொண்டு நீ இன்னுமாடா ஆடிட்டு இருக்கிற, நாங்க வோல்கனோ ஷோ (Volcano Show) போறோம் வரியா என்றான். அவனை பார்க்காமலே வரலடா என்று சொல்லிவிட்டு விளையாடினேன். 100 $ காலி. பர்ஸை திறந்தால்105 டாலர் தான் இருந்தது. ஊர் போய் சேரனும்டா சாமினு இத்தோடு முடிச்சுக்கலாம்னு எழுந்து, பக்கத்திலிருந்த ஃபுட் கோர்ட் சென்றேன். இன்னும் ஏர்போர்ட் போக ரெண்டு மணிநேரம் தான் இருக்கு. பீட்சா சாப்பிட்டுகொண்டிருக்கும்போது மனம் ஒரு நிலைப்பாட்டில் இல்லை. த்தா, 500 டாலர் காலிடானு தோனிச்சி. 

இன்னும் 100$ இருக்குடா, இத வச்சி எப்படியாவது உட்டத புடிக்கனும்னு, மறுபடியும் விளையாட போனேன். இரவு 8 மணியாகிவிட்டபடியால், டீலர்கள் இப்போது இளம்பெண்கள்.அவர்களணிந்திருந்த ட்ரெஸ் சற்று கவர்ச்சியாகவே இருந்தது. விளையாடுபவனை டேபிளிலிலேயே உட்கார வைக்கிற  யுக்தி. நான் அமர்ந்த டேபிளில் இருந்தவள் இன்னும் சற்று மார்கமாகவே இருந்தாள்; கலையான முகம்; அழகான சிரிப்பு. நானும் அவளும் மட்டுமே டேபிளில். அவள் குனிந்து கார்ட் போடும்போது, பாதிக்குமேல் தரிசனம் தந்தாள். ஆனாலும் அப்போது எழுந்த காம உணர்வை, சூதாட்ட வெறி அடக்கியது. நான் சைடு பெட்-லாம் வைத்து ஆடியாதால் என்னை அவளுக்கு பிடித்து போனது. இருமுறை நான் ஜெயிக்கும்போது நாங்கள் இருவரும் கைகளால் சியர்ஸ் செய்துகொண்டோம்.அவளுக்கு மிருதுவான கைவிரல்கள். நான் தோற்கும்போதெல்லாம், "இட்ஸ் ஓகே" என்பதுபோல் சைகை செய்வாள். இவ்வாறாக அவளை பார்த்துக்கொண்டே கடைசியாக இருந்த 100 டாலரும் அம்பேல். நான் அந்த பெண்ணோடு ஆடிக்கொண்டிருந்ததை பார்த்த வடிவேலு ஒரு மாதிரி சிரித்தான். நானோ, " சிரிக்காத மச்சி, எல்லாம் காலிடா, பர்ஸ் எம்ப்டி" என்றேன். அப்போது தான் நினைவுவந்தது அவன் எனக்கு அம்பது டாலர் தரவேண்டுமென்று. விடுவேனா, கண்ணைமூடிக்கொண்டு அதையும் வாங்கி விளையாடச்சென்றுவிட்டேன். 4 சுற்றில் அதுவும் போயிற்று.

இன்னும் அரைமணிநேரம் தான் இருக்கு டாக்சி புடிச்சி ஏர்போர்ட் போக. எல்லாரும் பக்கத்திலே இருந்த பார்-க்கு போலாமென்றார்கள். எனக்கோ, உள்ளுக்குள்ள ஒருவித மனசிராய்ப்பு இருந்தது. "ச்ச, என்னடா இது ஒண்ணுமே தெரியாம வந்தேன், கத்துகிட்டு கேம் விளையாண்டேன், கொஞ்சம் பணம் ஜெயிச்சேன், ஜெயிச்சத விட்டுட்டு, இப்போ கொண்டுவந்த பணமும் இப்டி காலியாகிடுச்சே அப்படியெல்லாம் சிறிதும் நினைக்காமல், உடனே வீர்பாகு-கிட்ட 60 டாலர் கடன் வாங்கி மறுபடியும் விளையாட போனேன். அவர்களெல்லாம் சரக்கடிக்க போனானுங்க. நான் டேபிள்  டேபிளாக பார்த்து அலைந்தேன். 20$ டேபிளில் அமர்ந்தேன், மினிமம் 20$ பெட்.; மூனே சுற்று; 60 டாலர் காலி. அப்படியே எழுந்து வந்து, அவர்களோடு ரெண்டு பெக் அடிச்சிட்டு ஏர்போர்ட் கிளம்பினேன்.

ஏர்போர்ட் வந்தது, திரும்பி பார்த்தேன், அனைவர் முகத்திலும் ஏக்கம் நிறைந்த சோகம். இன்னும் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு போகலாமா என்றெண்ணிக்கொண்டே கூட வந்தவர்களிடம் கேட்க முனைந்த போது,  “ஐ ஆம் கோன்ன மிஸ் திஸ் பிளேஸ் பேட்லி டூட்..” பதில் வந்ததது.
ஃப்ளைட்டில் அமர்ந்துகொண்டே யோசித்தேன். 600 $ இழந்ததில் துளிகூட வருத்தமில்லை, இந்த 4 நாட்கள் கிடைத்த அனுபவம், எவ்வளோ மில்லியன் கொடுத்தாலும் கிடைக்காது. தமிழ்நாட்டில், விழுப்புரம் பக்கம், ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, வளர்ந்த நான், அமெரிக்கா வரை வந்து, அதுவும் சொர்க்க பூமியான லாஸ் வேகாஸில் கேசினோ-வில் உலகின் எல்லா நாட்டவரோடும் இணைந்து, சரிசமமாக கேம்ப்லிங் விளையாடி, களிப்புற்று, இன்பமுற்று கிடைத்த இந்த அனுபவம் நான் இறந்தாலும் மறக்கமுடியாதது. இதிலிருந்து நான் அறிந்த ஒரு விஷயம் என்னவென்றால், மது, மாது-வை விட சூது-தான் ஆகக்கொடிய போதை. பீரியட்