Thursday, May 22, 2014

"திங்கட் கிழமை" - சாத்தான் தேவதையான கதை


+1, +2 படித்துக்கொண்டிருக்கும்போதும், விடுமுறை மற்றும் ஞாயிறு முடிந்து கல்லூரி ஹாஸ்டலுக்கு திரும்பும்போதும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருத்தல் என்பது ரணக்கொடூரம். திங்கட்கிழமை லீவ்போட்டுவிட்டு நாள்முழுக்க தூங்கிவிடலாமென்று தோன்றும். ஆனால் வேறு வழியின்றி எழுந்து, மஞ்சள் நிற வெளிச்சத்தில் வேண்டாவெறுப்பாய் காண்டாமிருகம்போல் குளித்துவிட்டு, அம்மா கொடுக்கும் டீயை குடித்துவிட்டு, வாசல்வரை அம்மா வந்து எட்டி சகுனம் பார்த்து, எனக்கு டாட்டா சொல்லிவிட்டு, ஐந்தரை, ஆறு மணிக்கு விழுப்புரம் பஸ்டாண்டில் பஸ் ஏறி, காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி/சென்னை சென்று இறங்கினால் தான் திங்கட்கிழமை என்ற எமகாத எரிச்சல் அடங்கும்.

ஹாஸ்டல் நாட்களில் கூட வாரயிறுதிகளில் டி-நகர், தேவி தியேட்டர் என சுற்றிவிட்டு ஞாயிறு இரவன்று திங்களைப் பற்றி நினைக்கையில், அக்தர் பாலை எதிர்கொள்ளும் கங்குலி போல் கிடிகிடுவென்று நடுங்கும். அப்பயத்தைப் மறக்க டிவி ஹாலிலோ, நண்பனின் கம்பியூட்டரிலோ படம் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிப்போவேன். ஆனால் திங்கட்கிழமையை எப்படியாவது கடத்திவிட்டால், அடுத்து வருகிற நான்கு நாட்களை எதிர்க்கொள்ளக்கூடிய தைரியம் தானாகவே வந்துவிடும். இந்த திங்கள் சுழற்சி பள்ளி, கல்லூரி தாண்டி ஆறு வருட ஐ-டி வேலையிலும் தொடர்ந்ததுதான் முகேஷ்த்தன சோகம்.

+2ல நல்லா படிச்சி மார்க் வாங்கினா காலேஜ்-ல ஜாலியா இருக்கலாம்னு ஸ்கூல் வாத்தியார் சொன்னதும், காலேஜ்-ல நல்லா படிச்சி வேலை வாங்கிட்டா அப்புறம் லைஃப்ல செட்டில் ஆகிடலாம்னு புரொஃபசர் சொன்ன பொன்மொழிகளும் அடிக்கடி ஞாபகம் வந்து கடுப்பேற்றும். அதையெல்லாம் லெஃப்ட் கையால் தள்ளிவிட்டு, ரைட் லெக்-கால் மண்டே என்ற மெகா பூதத்தை எதிர்கொள்வேன். அந்த பூதம் என்னை அமெரிக்கா வரை வெள்ளை உருவில் விரட்டி வந்து என்னை மிரட்டியது. வீக்கெண்டில் மினியாபொலிஸ் டவுண்டவுன், இண்டியன் ரெஸ்டாரண்டில் இந்திய சாப்பாடு, வால்மார்டில் ஷாப்பிங், கார்மைக்கில் ஆங்கிலப் படம் என்று சரமாரியாகச் சுற்றிவிட்டு, அன்றிரவு மண்டே பற்றி நினைக்கையில், கிளையண்ட் மீட்டிங், வீக்லி ஸ்டேட்டஸ் மீட்டிங், டெலிவரி என ஆக்டோபஸ் கைகள் வந்து கழுத்தை நெரிக்கும்.

ஒரு கட்டத்தில் உங்க பூசாரித்தனமும், பொங்கச்சோறும் வேண்டாமென்று முடிவெடுத்தபின்னர்தான் (அதான், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு டாட்டா காட்டிவிட்டு இந்திய ஜனநாயகத்தில் மீண்டும் இரண்டறக் கலந்தது) பாலுமகேந்திரா, ராம், வெற்றிமாறன் போன்ற தேவதைகளில் கைகள் நீண்டு என்னை அரவணைத்தன. இது திடீர் முடிவல்ல. கல்லூரி முதலாமாண்டிலிருந்தே என் சினிமாக்காதலியை ஒருதலையாகக் காதலித்து வந்தேன். அவள் என்னை திரும்பி கண்கொண்டு பார்க்கவே பத்தாண்டுகள் ஆனது. இனிதான் கரம்பிடிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளி செல்லும் உணர்வு. 520 கசப்பான திங்கட்கிழமைகளுக்குப் பிறகு, சுதந்திரமான, அர்த்தமுள்ள திங்கட்கிழமைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

“ராம்” என்ற யூனிவர்சிட்டியில் சேர வாய்ப்பு கிடைத்தபோதுதான் கலங்கிய என் மனக்குட்டை தெளிவுற்றது. ஒரு தேனீ போல சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் சினிமாத்தேன் சேகரிக்க ஆரம்பித்தேன். ராம், எல்லா வகையான பூக்களிலிருந்தும் எங்களை தேனெடுக்க வைத்தார். எது தேன் என்பதே தெரியாமலிருந்த எனக்கு இதுதான் தேனென்று கூறினார். ஆனால் அதை அவர் எங்களுக்கு ஸ்பூனால் ஊட்டவில்லை. மண்டே என்ற பூதம் இப்போது கிட்டதட்ட இப்போது மறைந்தேவிட்டது. மண்டே மேட்னிகளில் சினிமா செல்லும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும். இன்ஸ்டிடியூட்டில் அமர்ந்து, ராம் ஆஃபீஸில் அமர்ந்து கதை விவாதிப்பது எத்தனை பாக்கியமான நிமிடங்கள். கிட்டத்தட்ட எது திங்கட்கிழமை, எது ஞாயிறு என்றே தெரியாமல் போனது.

அரசு துவக்கப்பள்ளியில் படித்த நான் ஹார்வர்ட் யூனிவர்சிட்டிக்கு சென்று ஏ, பி, சி, டி பயில ஆரம்பித்தேன். அதுதான் “தரமணி” படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு. அப்படத்தை பார்த்தே ஏ, பி, சி, டி கற்றுக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு வாக்கியம் அமைப்பது மட்டுமே பாக்கி. நான் எடுக்கப் போகும் எல்லா படங்களின் டைட்டில் கார்டும், “நன்றி பாலுமகேந்திரா”, “நன்றி ராம்” என்று துவங்குவதே சரியாக இருக்கும்.

Tuesday, April 1, 2014

கோடைகால நண்பன்


இது ஒரு நீண்ட நெடிய நாஸ்டால்ஜியா பதிவு. சன் மியூசிக் பார்த்துக்கொண்டே படிப்பவர்கள், சென்னை பத்ம சேஷாத்ரி ஸ்கூலில் படித்த(ப்ப)வர்கள், சமீபத்தில் காதலில் விழுந்தவர்கள் வெறும் ‘லைக்’ மட்டும் இட்டுவிட்டு இதைக் கடந்துவிடலாம்.

மழைக்காக கடைகளிலோ, பேருந்து நிழற்குடையிலோ ஒதுங்கி சலித்துக் கொள்பவர்களை விட, கோடைகால வெயிலுக்கு பயந்தொதுங்கி, அதன் உக்கிரம் தாங்காமல் மோர் (அ) கூல்ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு அதை சபிப்பவர்கள் தான் அதிகம். ஆனால், நானோ மழையை விட, வெயிலை அதிகம் ரசித்துக் கொண்டா(டுபவன்)டியவன். மழை என்பது வீட்டிலிருந்தபடி ரசிக்ககூடிய ஒரு அழகான நடிகை போல; ஆனால், வெளியே வந்தால் சகிக்க முடியாத, மேக்கப் கலைந்த நடிகையாகி விடுகிறாள். ஆனால், வெயில் அப்படி அல்ல, எப்போதும் ரசிக்கக் கூடிய காதலி போல. கோபமடைந்து உக்கிரமானாலும் ரசிக்கலாம். ஏப்ரல், மே சூரியனின் வெப்பம் தலையிலிறங்கி, உடல் முழுவதும் பரவி, உள்ளங்கால் வரை சென்று முடிகிற பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது.

என்பதுகளில் இறுதியில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கிராமத்தில் என் பால்யத்தை ஆரம்பித்தேன். ஜூன் முதல் மார்ச் வரை பல்வேறு பருவநிலைகளுக்கும், பருவத் தேர்வுகளுக்கும் உட்பட்டு, முழு ஆண்டுத் தேர்வை முடிப்பதற்குள் படாத பாடுகளைப் பட்டு, இலவு காத்த கிளி போல கோடை விடுமுறைக்காக காத்துக் கொண்டிருப்போம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமூக அறிவியல் என ஒவ்வொரு தேர்வின்போதும் விடுமுறையை எதிர்நோக்கிய தீவிர மனநிலை தொக்கி நிற்கும். சமூக அறிவியல் பரீட்சையில், பிரிட்டனையும், ஜப்பானையும்  மேப்’பில் மாற்றி குறித்துவிட்டு, இங்க் பேனாவால் நண்பர்களின் வெள்ளைச் சீருடைகளில் நீல நிற ஓவியங்களை வரைந்துவிட்டு, பரீட்சை அட்டையை வீட்டில் கொண்டு தூக்கி எறிகிறபோது வருகிற ஆனந்தம் ஆறு ஆடி கார் வாங்கினாலும் வராது. 

கடைசி பரீட்சை முடிந்த மதியமே கிரிக்கெட் ஃபீவர் பிடித்துவிடும். அம்மா துணி துவைக்க வைத்திருந்த மரத்தாலான கட்டையை பேட்’டாகவும், அப்பா/தாத்தா-வின் கைத்தறி நூல் மிச்சங்களைக் கொண்டு செய்த பந்தை எடுத்துக்கொண்டு விளையாட ஓடிவிடுவோம். கோடையாதலால் ஏரிக்கரையும், குளமும் நீர் வற்றி நாங்கள் விளையாடுவதற்கென்றே ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடும். வெற்றுடம்பே எங்களுக்கான ஜெர்சி. கிணறு, குளத்தில் எஞ்சியிருக்கும் தண்ணீரே எங்களுக்கான பெப்ஸி, கொக்ககோலாக்கள்.

எங்க ஊர் கிரவுண்டுகளைத் தவிர பக்கத்து ஊர் ஈடன் கார்டன், தர்மசாலாக்களிலும் போய் விளையாடுவதுண்டு. நாங்கள் ஆடும் கிரிக்கெட்டை, காலை, உச்சி, மாலை என வானத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து சூரியன் காசு கொடுக்காமல் பார்த்து கண்டு களிப்பான். நாங்கள் அவனை கண்டுகொண்டதே இல்லை. மேட்ச் முடிந்து, புழுதியை ஷூவாக மாட்டிக்கொண்டு, வீடு திரும்பி, என்னை தேடிக் களைத்த அம்மாவின் கையால் எனக்கே எனக்கென்று இருக்கும் டம்ப்ளரில் டீ குடித்தால்தான் அன்றைய நாள் முழுமையடையும்.
 
எங்கள் வீடு மாடி வீடு என்பதால், மொட்டைமாடியிலிருந்து உஷ்ணம் இறங்கி அறையினுள் வியாபித்து இருக்கும். ஃபேன், அதே உஷ்ணக் காற்றைத்தான் திரும்ப திரும்ப சுழல விட்டுக்கொண்டிருக்கும். இதனால், தெருவிலிருக்கும் கானிலிருந்து(அடி பம்ப்) குடம் குடமாக தண்ணீரை மொட்டை மாடி மற்றும் திண்ணைகளில் ஊற்றி குளுமைப்படுத்துவோம். சில சமயங்களில் மொட்டை மாடி (அ) திண்ணைகளிலேயே படுத்துறங்கி விடுவதுண்டு. கோடையில் குளிப்பதெல்லாம் பாத்ரூம் அறையில் இல்லை, அடிபம்பில் அடித்து தெருவிலேயே சுமார் இரண்டு மணிநேரம் குளிப்போம்.
 
கிரிக்கெட்டை அடுத்து கோடைகால அதீத எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று, பாண்டிச்சேரி-கதிர்காமத்திலுள்ள என்னுடைய அத்தை வீட்டுக்குச் செல்வது. என் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயம். பேருந்தில் அம்மா/அப்பா (அ) தாத்தா/பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு பாண்டிச்சேரி இறங்கி, அத்தை வீடு இருக்கும் தெருவில் நடக்கும்போது வருகிற அளவில்லாத மகிழ்ச்சி என்பது, நான்கு கிராண்ட் ஸ்லாமயும் ஒரே வருஷத்தில் வாங்கியதுக்கு ஒப்பானது. பாண்டிச்சேரியின் எல்லா சாலைகளின் ஓரத்தில் இருபுறமும் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருப்பது வித்தியாசமாகத் தோன்றும். அத்தை மகன்களுடன் அந்த செம்மண் பூமியில் கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிளில் ஊர் சுற்றுவது, முருகா, ஆனந்தா தியேட்டரில் படம் பார்ப்பது, செடில் திருவிழா என்று படு சுவாரஸ்யமாகச் இருக்கும்.
 
இதற்குள் இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து தொலைக்கும். பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது மறக்காமல் என் மாமா செலவுக்கு காசு கொடுத்தனுப்புவார். கிளம்ப மனமின்றி கிளம்புவேன்.  ஊர் திரும்பினால் கண்டிப்பாக பாஸ் ஆகியிருப்பேன். மூடியிருந்த பள்ளி ஜன்னலில் ரிசல்ட் ஒட்டியிருப்பார்கள். மீண்டும் அதே சுழற்சி. அடுத்த வகுப்பு, புது புத்தகங்கள், நோட் புக்குகள், காலண்டு, தீபாவளி, அரையாண்டு, பொங்கல், முழுஆண்டு அப்புறம் மீண்டும் அந்த கோடை.
 
இப்படியாக, பத்தாம் வகுப்பு, +2 வரை தொடர்ந்தது. கல்லூரி வந்தேன். காலங்கள், காட்சிகள் மாறின. கேம்பசில் வேலை கிடைத்து, நான்காண்டு கல்லூரி படிப்பை எப்படா முடிப்பேன் என்று முடித்து ஒரு மாதம் வீட்டில் கோடை விடுமுறையை கழித்தேன். அதே கோடை, அதே சூரியன்; ஆனால் ரசிக்க முடியவில்லை. ஆஃபர் லெட்டர், வொர்க் லொகேஷன் என்று மனம் பிதற்றிக்கொண்டிருந்தது. ஒரு மாதம் முடிவதற்குள்ளே வேலைக்கான கால்(Call) வந்தது. 2007 சம்மர். அன்று தொடங்கி 6 1/2 ஆண்டுகள் இடைவெளியில்லாத நீண்ட பயணம். பெயருக்குத்தான் வெகேஷன் லீவ். ஆனால் ஒருபோதும் எடு(த்த)ப்பதில்லை. ஒவ்வொரு சம்மரும் ஏ.சி ரூமில், கணினி மற்றும் மனித எந்திரங்களுக்கிடையே கழிந்தது. சூரியனை ரசிக்கக் கூட நேரமும், மனமும் இருக்காது. பத்து  ஆண்டுகளாக என்னைத் தேடி, களைத்து ஏமாந்து போயிருப்பான் சூரியன். காடுகளில், வயல்களில் இருக்கவேண்டிய காய், கனிகள், ஃப்ரிட்ஜ்-களில் அடைபட்டிருப்பது போல இருந்தேன்.
 
இதோ விழித்துவிட்டேன். 10 வருடங்கள் கழித்து, சுதந்திர கோடையை அனுபவிக்க மீண்டும் கிளம்பிவிட்டேன். தாயை நோக்கி சிரித்துக் கொண்டு முட்டி போட்டுக்கொண்டே ஓடும் சிறு மழலை போல, என் உற்ற தோழன் சூரியனை, பால்ய சிநேகிதனை ஆர்ப்பரித்து ஆரத்தழுவ ஆயத்தமாகிவிட்டேன்.

Wednesday, March 19, 2014

தராசு


   அம்பத்தூரிலிருந்து வேளச்சேரி சற்று அதிக தொலைவுதான் என்றாலும், என் பள்ளிக்கால நண்பன் முத்துக்குமரனை சந்திக்க போய்க்கொண்டிருப்பதால் அவ்வளவு தூரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை எனக்கு. நானும், முத்துவும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தோம். அவன் நன்றாகப் படித்து +2 வில் நல்ல மார்க் எடுத்து, அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்சினியரிங் படித்துவிட்டு இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். நானும் அவனளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராகப் படித்து, மேற்படிப்புக்காக ஊரைப் பிரிய மனமின்றி உள்ளூரிலேயே அதிக வசதியற்ற ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு, ஊர்க்காரர்களின் கேள்விக் கணைகளுக்கு பயந்து, இப்போது இந்த சென்னை மாநகரில் வேலைக்காக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு கட்டத்தில் பிடித்து போய் விட்டது. நண்பன் ரூமில் தனியாக இருக்கும் நேரத்தில், பஸ்சுக்கு மட்டும் போக வர காசு எடுத்துக்கொண்டு சும்மாவே சுற்றிவிட்டு வந்த நாட்களும் உண்டு. தோராயமாக இரண்டு வருடமிருக்கும் அவனைப் பார்த்து. இன்று காலை தான் அவனுக்கு ஃபோன் செய்தேன். அவனை பார்க்கத்தான் இப்போது மாநகரப் பேருந்தில் வேளச்சேரி சென்று கொண்டிருக்கிறேன்.

அவன் சொன்னபடி வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கி அவனுக்காக காத்திருந்தேன். பத்தாவது நிமிடத்தில், ஒரு கருப்பு நிற பல்ஸர் என்னை நோக்கி வந்தது. அவன்தான். தத்தம் நலன், மற்றும் குடும்ப நலங்களை விசாரித்தோம். எனது உள்வாங்கிய கண்ணும், சற்றே நொடித்த வயிறும் என்னுடைய பசியை அவனுக்கு சொல்லாமல் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நொடியே, “வா மச்சான், சாப்பிட போலாமென்றான்”. வேளச்சேரி ரயில் நிலையம் போகும் வழியில், பக்கவாட்டில் இரண்டு அரக்கன் போல், எதிரெதிரே கேஎஃப்சி-யும், மெக் டோணல்ட்-ம் ஒன்றுக்கொன்று போட்டியாக நின்று கொண்டிருந்தது. சுமார் எட்டு/பத்து வருடம் முன்பு இவ்விடத்தில் ஏரியும், முட்புதருமாக இருந்ததாக என் சித்தப்பா ஒரு முறை சொன்னதாக ஞாபகம். 

கேஎஃப்சி-யில் நுழைந்து இரண்டு சிக்கன் ஸிங்கர் மீல் ஆர்டர் செய்தான். 600 ரூபாய் பில் வந்தது. சேவை மற்றும் இதர வரிகள் மட்டுமே  80 ரூபாய். ஒரு வேளை சாப்பாட்டிற்க்காக 600 ரூபாய் அவன் செலவு செய்தது எனக்கு கோபமாகவும், ஒரு விதத்தில் என்னால் தான் என்பதால் வருத்தமாகவும் இருந்தது. சாப்பிட மனம் முழுவதுமாக ஒட்டவில்லையென்றாலும், அவனுக்காக முழுவதுமாக சாப்பிட்டு முடித்திருந்தேன். சாப்பாட்டை தட்டில் வீணாக்குவது, அவனுக்கும் சரி, எனக்கும் சரி பிடிக்காது. அவனிடமிருந்து எனக்கு தொற்றிய பழக்கம் தான் அது. எல்லா இடத்திலும் அவனே செலவு செய்து கொண்டிருந்ததால், ஒரு நுண்ணிய குற்றவுணர்வு என்னுள் வியாபித்திருந்தது. என் இயலாமையினால் விளைந்த உணர்வுதான் அது. என்னிடம் இருந்ததோ நான் திரும்பி போக பஸ்சுக்கு வைத்திருந்த 20 ரூபாய். அம்பத்தூருக்கு பஸ் டிக்கெட் விலை 15 ரூபாய். இதை வைத்துக்கொண்டு நான் அவனுக்காக என்ன வாங்கித்தந்துவிட முடியும்

சென்னை வந்ததிலிருந்து நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டிருந்தேன். முத்துவோ தொடர்ந்திருந்தான் என்பது அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்று இரண்டு சிகரெட் வாங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அது எனக்கு பெரிதாக ஆச்சர்யம் தரவில்லை. ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்டினான். நான் அதை நிராகரித்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவன் நான். 

பள்ளிக்கால வாழ்க்கை தொட்டு, நேற்று ரூமில் கொசு விடாமல் கடித்த கதை வரை எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தோம். அவனின் பேச்சிலும் சரி, உடல் மொழியிலும் சரி, தான் ஒரு பந்தாவான, பகட்டான வாழ்க்கை வாழ்கிறோம் என காட்டிக்கொள்ளாமல், அசால்ட்டாக என்னிடம் பழகியது என்னை ஆச்சர்யபட வைத்தது. என் நண்பனை பற்றி எனக்கு தெரியுமென்றாலும், இந்த ஊரைப்பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இருந்ததில்லை. மேற்கத்திய வாழ்வை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிற சென்னை மாநகரம் என் நண்பனை கொஞ்சம் கூட சலனப்படுத்தவில்லை. அவனின் கேஎஃப்சி பிரவேசம் மட்டும் விதிவிலக்கு. ஒருவேளை அவனுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த பகட்டு என்னிடம் இருந்திருக்கக்கூடும்.


நான் சொல்ல வந்தது அதுவல்ல. இரண்டு சிகரெட்டுக்கு காசு கொடுக்க 500 நூறு ரூபாயை நீட்டினான் முத்து. கடைக்காரன் சில்லறை இல்லையென கூறிவிடவே, சட்டென்று, “மச்சான் உங்கிட்ட இருக்காடா” என, என்னிடமிருந்த 20 ரூபாயை என் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு மீதி 4 ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துகொண்டு என்னிடம் இரண்டை திணித்தான். அவன் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்ததால், என்னை மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, அடிக்கடி ஃபோன் பண்ணுடா எனக்கூறிவிட்டு கிளம்பினான். எனக்கு, நான் திரும்பிபோக காசில்லை என்ற எண்ணத்தை விட, அவனுக்காக ஒரு 20 ரூபாயாவது செலவு செய்ய முடிந்த்தே என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவது இல்லை. இரண்டு நிமிடம் அங்கேயே உறைந்தபடி நின்று என்ன செய்வது என்று அறியாமல், என் கண்ணிலிருந்து முதல் கண்ணீர் துளி புறப்படும் முன்னரே அதை துடைத்துவிட்டு அம்பத்தூர் நோக்கி நடக்கத் துவங்கினேன். யூ-டர்ன் செய்துவிட்டு அதே ரோட்டில் மீண்டும் வந்த முத்து, என்னை கண்டு, வண்டியை நிறுத்தி ஒரு கணம் என் கண்களையே பார்த்தவன், எல்லாம் புரிந்தவனாய், “ஏறுடா பைக்கில” என்றான். இந்த முறை கண்ணிலிருந்து புறப்பட்ட கண்ணீர்துளி, துடைக்க அவகாசம் கொடுக்காமல், புவிஈர்ப்பு விசையினால் பூமி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.

சென்னை இரவுகள் @ தி.நகர்

                               
    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்குகிற தியாகராய நகர் () தி.நகர், சென்னையின் மிக முக்கியமான வணிகப் பகுதி. துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள், மாநகர பேருந்து நிலையம், மாம்பலம் ரயில் நிலையம், மற்றும் சில்லறை வணிக சிறு கடைகள் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற பகுதி.

அன்று திங்கள் கிழமை. இரவு 10 மணிக்கே, நாங்கள் மூவரும்  அங்கு சென்றுவிட்டோம். இரவு முழுவதும் அங்கு இருக்கவேண்டியிருந்ததினால், சாலையில் டூ வீலருக்கு உத்தரவாதம் இல்லையென்றெண்ணி, மாம்பலம் ரயில்வே பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு வரும் வழியில் உள்ளூர் பெருமாள் சாமி, நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார். அதே நேரம், பல பெருமாள் சாமிகள் இந்த உலகையே மறந்த நிலையில், டி நகரின் வீதியினூடே அழுக்கு சட்டை சகிதமாக, எந்தவித பிரக்ஞையிமின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது.
பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் எதிரே அமைந்த டீக்கடைக்கு சென்று டீ அடித்துவிட்டு பேருந்து நிலையம் நுழைகையில், பேருந்துகள் அனைத்தும் நாள் முழுக்க சென்னையை சுற்றிய களைப்பில் பெருமூச்சு விட்டு, பின்பு அடங்கின. மெல்ல மெல்ல ஆட்டோ எனப்படும் மஞ்சள் நிற வஸ்துக்கள் இப்போது பேருந்து நிலையத்தின் வாயிலை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. கடைசி பஸ்சை தவற விட்ட மக்கள், பெரும்பாலும் ஆண்கள், ஷேர் ஆட்டோவுக்காகவோ, இரவு நேர பேருந்துக்காகவோ கால் கடுக்க காத்திருந்தனர். இவர்களுக்கிடையில் ஒரே ஒரு, 40 வயது மதிப்பிடத்தக்க, பெண்மணி மட்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தாள். ஷேர் ஆட்டோக்காரர்கள், வடபழனியையும், கோயம்பேடையும் கூறுபோட்டு விட்டுக்கொண்டிருந்தனர். ஓரிரு டீக்கடைகள் மற்றும் இரவு நேரச்சிற்றுண்டி கடைகளை தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் மூடப்பட்டுவிட்டிருந்தன.

Employees of the Textile Giants

சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் என தி.நகரின் மிகப்பெரும் துணிக்கடலில் (நின்றுகொண்டு) வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் தத்தம் தோழன், தோழிகளோடு, அவர்களது கால்வலி பொருட்படுத்தாது, புன்னகையோடு அரட்டையடித்தபடி அவர்களது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் நடிகர், நடிகைகள், பார்த்த/பார்க்கபோகும் சினிமாக்களை பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. ரங்கநாதன் தெருவில், பகலில் மனிதர்கள் அலட்சியமாக விட்டுச்சென்ற, தூக்கியெறிந்த குப்பைகளை, அந்த குப்பைகளுக்கு கொஞ்சமும் பொறுப்பாகாத துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12:00

சிவப்புத் துணி போர்த்திய பானையில் குல்ஃபி ஐஸ் விற்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூன்று சக்கர வாகனத்தில் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தனர். மஞ்சள் நிற சிக்னல் விளக்குகள் தனக்கு பிடித்தமான காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் நொடிக்கொருமுறை கண்ணடித்துக்கொண்டிருந்தன. இந்த காதலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், கால் டாக்ஸிகள் மற்றும் டூ வீலர்கள் சிக்னலை வேகமாக பாய்ந்து கடந்து, மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தன.

கொசு தன் காதில் வந்து பாடிய இன்னிசை ராகத்தைக் கூட கேட்க விரும்பாமல், உலகிலேயே மிகவும் அழுக்கான போர்வை என்று அனைவரது பாராட்டையும் பெற்ற போர்வையை போர்த்திக்கொண்டு பேருந்து நிழற்குடையில் உறங்கிக்கொண்டிருந்தார் ஒரு மனிதர்.  அந்த 40 வயதுமிக்க பெண்மணி இன்னும் அதே இடத்தில், செல்ஃபோனை நோண்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது ஆட்டோக்காரகளிடம் சென்று முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பின் சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்தின் எதிரே சென்று நின்றுகொண்டாள். இதையெல்லாம், நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு கவனித்துக்கொண்டிருந்தேன்.

அதில் ஓர் ஆட்டோக்காரரை அணுகி, ”யாருங்க அந்த பொம்பள, ரெண்டு மணி நேரமா இங்கயே நின்னுட்டு இருக்காங்க, நைட் ரோந்து போலீஸா, இல்ல ஐட்டக்கார பொம்பளையாஎன்று நான் கேட்க, “தெரியலைப்பா, போலீஸா இருந்தாலும் இருக்கலாம், இப்பல்லாம் நைட் போலீஸ் கெடுபுடி அதிகம் இருக்குஎன்றார் அவர். அதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் ரோந்து வாகனங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளை சுழலவிட்டுக்கொண்டு சுற்றி வந்துகொண்டிருந்தன. ரொம்ப நேரமாக அங்கேயே உலவிக் கொண்டிருந்த எங்கள் மீதே சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. வெள்ளை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு மீசைக்காரர் எங்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு, பஸ்சை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல் இருந்துவிட்டோம். ஒரு வயதானவரிடம் அந்தப் பெண்மணி எதோ பேசிக்கொண்டிருக்கையில், தாம்பரம் போகிற இரவுப் பேருந்து ஒன்று சடேலென வந்து நிற்க, வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.

ஒரு மணிவரை இப்படி மனித நடமாட்டம் இருந்துகொண்டிருந்ததாலும், வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடந்துவிடக்கூடிய சூழல் இல்லாதபடியும் இருந்ததால், மேம்பாலம் மேலேறிச் சென்று வந்துவிடலாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம். மேம்பாலத்தின் இருபுறமும் மின்கம்பங்கள், கவுண்டமணியைக் கண்ட கரகாட்டக்காரன் செந்தில் போல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தன. மெர்குரி விளக்குகள் மஞ்சள் ஒளி மழையைப் ஏகாந்தமாகப் பொழிந்துகொண்டிருந்தது. மேம்பாலத்தில் ஏறுகையில், ரங்கநாதன் தெரு இப்போது குப்பை கூளங்களற்று சுத்தமாக காணப்பட்டது.  தேங்க்ஸ் டு துப்புரவு தொழிலாளர்கள். ஜிஆர்டி தங்க மாளிகை உள்ளிட்ட ஏனைய ஜுவல்லரி கடை செக்கியூரிட்டிகள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். போத்தீஸ் ரோடு வளைவில், போலீஸ்காரர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் சல்லடை போட்டும், துருவி துருவி விசாரித்துக் கொண்டிருந்தது.

இப்படியாக மணி ஒண்ணைத் தாண்டியும் தி.நகர் ஒரு அமைதிப் பூங்காவைப் போலவும், மக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்தபடி இருந்ததனால், நெல்சன் மாணிக்கம் ரோடு போக முடிவு செய்தோம்.

 நெல்சன் மாணிக்கம் ரோடு

சூளைமேட்டில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் ரோட்டைப் பற்றி, குறிப்பாக இரவு நேரத்தில் அந்த ரோட்டைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு மணி 11:00, அல்லது 11:30 க்கு மேல் நீங்கள் இந்த ரோட்டைக் கடக்க நேர்ந்திருந்தால், சாலை ஓரங்களில் உற்று நோக்கியிருந்தால் ஒருவேளை நான் சொல்ல வருவது பற்றி உங்களுக்கு பொறி தட்டலாம். லயோலா கல்லூரி சப்வே தொடங்கி, அமைந்தகரை ஸ்கைவாக் (SkyWalk) வரை உள்ள சாலைதான் நெல்சன் மாணிக்கம் சாலை. இந்த சாலையில் தான் பெரும்பாலான தமிழக மக்களுக்கு பரிச்சயமே இல்லாத தெலுங்கு நடிகர் சோபன் பாபு-வின் திருவுருவச்சிலை அமைந்துள்ளது. நான் சொல்ல வருவது கண்டிப்பாக இவரைப் பற்றி அல்ல. இந்த சாலையின் இருபுறமும், இரவு 11:30 க்கு மேல், கவர்ச்சியாக உடையணிந்த அழகான இளம் பெண்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் இவர்கள் பெண்கள் என்று தான் நம்புவீர்கள். உண்மையில் இவர்கள் க்ராஸ் டிரெஸ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிற திருநங்கைகள்.

இவர்கள் குழுக்களாகவோ, தனியாகவோ நின்று கொண்டு, சாலையில் கடக்கும் ஆண் மகன்களுக்கு வலை விரிப்பார்கள். வலையில் அகப்பட்ட பசித்த சிங்கங்களை(?) இந்த மான்கள் கவர்ந்து சென்று விருந்து வைக்கும். விசாரித்ததில், விருந்துக்கு 1500 ரூபாய் என்றும், அறையில் என்றால் 3000 ரூபாய் என்றாள் ஒருத்தி. மேலும் விபரங்கள் கேட்க எண்ணுகையில் ரொம்ப நேரம் இங்கு நிற்காதீர்கள், போலீஸ் தொல்லைஎன்றாள். அவர்கள் வியாபாரத்தை கெடுக்கவேண்டாமென்று எண்ணி விலகிச்சென்றுவிட்டோம். அவள் குரலில் ஒருவித மென்மை இருந்தது. அதிகாரத் தோரணையோ, மிரட்டும் தொணியோ இல்லை. பகல் நேரத்தில் நாம் பார்க்கும் திருநங்கைகளுக்கு நேரெதிர் குணாதிசயங்கள் கொண்டிருந்தனர்.

அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து 300 அடி தள்ளி, சரியாக அந்த தெலுங்கு நடிகரின் சிலையருகே, போலீஸ் எங்களை மடக்கி பிடித்தது. நான் குடித்திருக்கிறேனா, இல்லையா என்று என் நலன் மேல் அக்கறை கொண்டு, என்னை ஊதச்சொன்னார் போலீஸ்காரர். ஊதிக்காட்டிய பிறகு, ஏமாற்றமடைந்த அவர் பேப்பர்களை சரிபார்த்துவிட்டு, பின் எங்களை அனுப்பிவிட்டார். அப்படியே இடப்பக்கம் திரும்பி, ஒரு சிறிய சந்து வழியே மீண்டும் அவர்களை சந்தித்து பேச எண்ணினோம். சந்தின் மூலை முடுக்குகளில், இருட்டினில் அங்காங்கே திருநங்கைகள் தான் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மிரட்டி வியாபாரம் செய்வதோ, தானாக பேச்சு வலிந்து பேச்சு கொடுப்பதோ இல்லை. இஷ்டபட்டு வந்து பேசும் ஆண்களிடம் மட்டுமே பேசுகின்றனர். இவ்விடத்தில் வரும்போது மட்டும் டூ வீலர்கள், கார்கள் மற்றும் கால்களுக்கு வேகம் குறந்துவிடும், அல்லது நின்றேவிடும்.

ஒரு வழியாக, ஒரு சந்தின் வழியே வந்து முன்பு பேசிய அதே நங்கையை பார்த்துவிட்டோம். அவளிடம் சென்று, உண்மையில் நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னோம். சென்னை இரவு வாழ்கையை பற்றியும், திருநங்கைகளின் பிண்ணனி மற்றும் அவர்களின் இரவு வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் கூறினோம். அவளும் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டேயிருக்கும்போது அவள் கண்கள் அங்குமிங்கும் அலைந்தது. அவள் இப்போது பிசியாக இருப்பதை புரிந்துகொண்டு, பகல் நேரத்தில் அவளிடம் பேசுவதாகச் சொல்லிவிட்டு அவளது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அதே தெருவில் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் டீ குடித்துவிட்டு நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து கிளம்பி தி.நகர் விரைந்தோம்
  
கிளம்பும் நேரம்  


மணி இரண்டரை ஆகியிருந்தது. திநகர் இன்னும் அதே அமைதிப் பூங்காவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு டீக்கடை மட்டும் பாதி ஷட்டர் மூடியபடி, குழுக்களாக வந்தவண்ணமிருந்த இளைஞர்களுக்கு டீ, சிகரெட்டுகளை விநியோகிக்கும் சேவையை செய்துக்கொண்டிருந்தது. ஒருவித மயான அமைதி குடிகொள்ள ஆரம்பித்ததது. இன்னும் ஒரு மணி நேரம் சென்றால் கூட இவ்விடம் மீண்டும் சூடுபிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிடும்.  அரை மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டுவிட்டு, 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.

Thursday, February 13, 2014

பாலு மகேந்திராவும் அவரின் ஒரு மாணவனும்..


இது இரங்கற்பா அல்ல. இரை தேடி ஒரு குருவி மிகப்பெரிய ஆலமரத்தில் வந்து அமர்ந்த கதை. 2010 (அ) 2011 -ல் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் சேர விழைந்து, சில காரணங்களால் சேர முடியாமல் போனது. கொஞ்சம் காசு சேர்த்துவிட்டு நுழைவோம் என்று 2013 ஜூனில் அரை மனதோடு அமெரிக்கா பறந்தேன். நான்கே மாதத்தில், சென்னையில் இருந்த சினிமா காந்தம் அமெரிக்காவிலிருந்த என்னை இழுத்துக்கொண்டுவிட்டது. வந்த கணமே அவர் இன்ஸ்டிடியூட்-க்கு ஃபோன் செய்துவிட்டேன் அடுத்த ஃபில்ம் மேக்கிங் கோர்ஸ் எப்போ ஆரம்பம் என்று. அடுத்த நாளே அப்ளிகேஷன் போட அவரது இன்ஸ்டிடியூட் சென்றேன் (2013 தீபாவளி முதல் நாள் என்று ஞாபகம்). வெறும் அப்ளிகேஷன் ஃபில்லிங் தான் என்று நினைத்த எனக்கு, அன்றே எதிர்பாராமல் அவரோடு நேர்முகத்தேர்வும் நடந்தது. அவர் அறையில் நுழைந்தவுடனே அவர் காலில் விழுந்துவிட்டேன். சினிமா பற்றிய என் அறிவை, புரிதலை அவர் தெரிந்துகொள்ள சில கேள்விகளை கேட்டார். நானும் எனக்கு தெரிந்த பதிலை அளித்தேன். நான் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச, என்னுடைய தமிழ் அவருக்கு பிடித்திருக்கிறது என்றார். அப்போதே என்னை தேர்வு செய்துவிட்டார்.  நிறைய புத்தகங்களை ப்டிக்குமாறு அறிவுறுத்தினார். கிளம்புகையில் மீண்டும் அவர் காலில் விழுந்து தரிசித்துவிட்டு கிளம்பினேன்.

ஜனவரி 20, 2014 அன்று வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் அறிமுகம் என்பதால், அவரே ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லி எங்களை படம் பிடித்தார் (5டி கேமராவில்). அன்று முதல் தினமும் அவரே எங்களுக்கு பாடம் எடுப்பார். வேறு யாருமல்ல. திரைக்கதை எழுதுவது, கேமரா பேசிக்ஸ், எடிட்டிங், இயக்கம் என ஒவ்வொரு க்ளாசிலும் அழுத்தம் திருத்தமாக பாடமெடுப்பார். தினமும் ஒரு திரைப்படம் வீதமாம எங்களுடன் அமர்ந்து பார்ப்பார். இன்னும் சினிமாவைக் கற்றுக்கொண்டிருப்பவன் போல.

ஒரு வாரம் கழித்து கால் சற்று தடுமாறி விழப்போய் இடது கண்ணுக்கு கீழ் லேசாக அடிபட்டது. அப்பவே சற்று கலங்கி போனோம். நான்கு நாட்களில் நன்றாக திரும்பி வந்த மனுஷன், விட்ட பாடத்தை சனிக்கிழமைகளில் எக்ஸ்ட்ரா வகுப்பு வைத்து முடித்தார். ஓளிப்பதிவு வகுப்பில், ஃபோகஸ் பற்றி விளக்க, என்னை வைத்து, என் பெயரை உச்சரித்து பாடம் எடுத்தபோது  எனக்கு சிலிர்த்துவிட்டது. 10, 20 முறை என் பெயரை உச்சரித்து இருப்பார்.

வீடு:

அன்று வீடு படம் திரையிட்டார். எங்களுடன் அமர்ந்து பார்த்தார். முன் நாள் சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டிருந்தது. வீடு படம் அப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன். வீடு மாதிரியான, நேர்த்தியான, யதார்த்தமான, நேர்மையான படைப்பை இவ்வளவு நாள் எப்படி நான் மிஸ் செய்திருந்தேன். "வீடு படத்தில் உங்கள் குரு சத்யஜித்ரே-வை மிஞ்சி விட்டீங்கள்" என உணர்ச்சிவசப்படாமல், முகஸ்துதி போல் அல்லாமல் அவர் கண்ணை பார்த்து கூறினேன். அவர் தன் புன்னகையில் என் கருத்தை நிராகரித்தார்.

அழியாத கோலங்கள்:

அழியாத கோலங்கள் இரண்டு நாள் கழித்து எங்களுடன் பார்த்தவிட்டு, டைம் மெஷின் ஏறி அவரின் விடலை பருவத்துக்கு சென்று வந்திருக்கிறார் என்பது அவர் பேச்சிலிருந்து தெரிந்தது.

எப்போதும் ரே, இளையராஜா, மூன்றாம் பிறை, குரோசவா, டேவிட் லீன் பற்றிய பேச்சுகள் அதிகமிருக்கும். நல்ல சினிமா என்று தான் நினைக்கும் இடத்துக்கு அருகாமையில் எங்களை இட்டுச்சென்றார். அவ்வாறு தான் பாலா, வெற்றி, விக்ரம், ராமசுப்பு ஆகியவர்களையும் இட்டுச்சென்றிருக்கிறார்.

கடைசி வகுப்பு:

அன்று CREATIVITY (படைப்பாற்றல்) க்ளாஸ். சாமன்யனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள வித்தியாசம், படைப்பாளியின் உந்துதலுக்கான ஆரம்பப்புள்ளி, படைப்பு மற்றும் படைப்பாளிக்கான விதை பற்றி பேசினார். பேச்சுவாக்கில், "ஒரு படைப்பாளி, தன் படைப்பின் உச்சத்தில் இருக்கும் போதே செத்துவிடவேண்டும்" என கூறினார். தனது DOWNFALL-ஐ பார்க்க எந்த கலைஞனும் விரும்பமாட்டான் என்றார். வகுப்பு முடிந்து கிளம்புகையில் எதேச்சையாக, தற்செயலாக அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். தேசம் போற்றும் ஒரு ஒளிப்பதிவாளன் தன் வாழ்நாளில் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.

கடைசி நாள்:

வழக்கம் போல சினிமா பட்டறைக்கு சீக்கிரமே சென்றுவிட்டேன். உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கேட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு பறந்தேன். பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பாலா மட்டும் பார்த்துவிட்டு வந்து கண்ணை துடைத்துக்கொண்டு கீழே வந்து சேரில் அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சு என்று யாரும் சொல்லவில்லை. 50 கிலோ எடை என் இதயத்துக்குள் புகுந்து கொண்டது. ஃபியூனரல்-க்கு ரெடி செய்கிறார்கள் என்ற செய்தி காற்றில் வந்து, காதில் விழுந்து, தொண்டையை முற்றிலுமாக அடைத்துக்கொண்டது. மாறாக கண்களில் மட்டும் என்னை அறியாமல் அருவி போல கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருந்தேன். கண்ணீர் ஒரு தொற்று வியாதி, என்னிடமிருந்து பலரிடமும், மற்றவரிடமிருந்து என்னிடமும் அழுகை தொற்றிக்கொண்டது.

சினிமா பட்டறையில் அவரை கிடத்தியிருக்கையில், அவர் கை, கால்களையே பார்த்துகொண்டிருந்தேன். ஒரு மிராக்கிள் நிகழ்ந்து அவரின் கை, கால்கள் அசைந்து துள்ளி எழமாட்டாரா என நம்பிக்கொண்டிருந்தேன்; எழவில்லை.

இவையனைத்தும் வரக்கூடாத ஒரு கெட்ட கனவை நான் காண்பது போலவும், காலையில் எழுந்து வழக்கம் போல சினிமா பட்டறை போய் அவரின் மழலை சிரிப்பை பார்க்கமாட்டேனா என ஏங்கிக்கொண்டிருக்கிறேன். ஆம், நான் அந்த கெட்ட கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

விதை:

அவர் விதைத்த நூற்றுக்கணக்கான விதைகளில், மிகச்சிறிய விதையை நான் பெற்றிருந்த போதிலும் அது விருட்சமாக வெளிவர எத்தனித்துக்கொண்டிருக்கிறது.